ஆர்‌.கே‌.பேட்டை அருகே அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: கர்நாடக அமைச்சர் பங்கேற்பு

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அடுத்த விடியங்கடு புதூர்மேடு  கிராமம் உள்ளது. இங்கு, பழமையான திரவுபதி அம்மன் ஆலயம் சுமார் ரூ1.50 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டது‌. இந்த கோயில் விமான கோபுரம் மற்றும் நவீன  கலை நுட்ப வேலைப்பாடுகளுடன் திருப்பணிகள் முடிக்கப்பட்டு மஹா கும்பாபிஷேக விழா கடந்த 3 நாட்களாக வெகு விமரிசையாக நடந்தது. இந்த, விழாவையொட்டி திருக்கோயில் மற்றும் பிரதான கிராம வீதிகளில் வண்ண விளக்குகள் மற்றும்  வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆலய வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு விநாயகர் பூஜையுடன் தொடங்கி, மஹா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் நித்திய ஹோம பூஜைகள் நடைபெற்றது.

இந்நிலையில்,   நேற்று காலை மஹா பூர்ணாஹூதி, ஹோம பூஜைகளை தொடர்ந்து புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. அப்போது, திருக்கோயில் சுற்றி கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் ஆலய ராஜ கோபுரத்திற்கு புனித நீரால் மஹா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், தீர்த்த நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை பூஜைகளை தொடர்ந்து, பக்தர்கள் அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

மஹா கும்பாபிஷேக விழாவில் கர்நாடகா மாநில மதுவிலக்கு அமலாக்க துறை அமைச்சர் கோபாலைய்யா பங்கேற்று அம்மனை வழிபட்டார். முன்னதாக அவருக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தொழிலதிபர் லோகநாதன் நாயுடு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சீராளன் உட்பட கிராம பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.  திருக்கோயில் நிர்வாகம் சார்பாக புனித நீர்க் கலசம் மற்றும் குங்கும பிரசாதம் வழங்கப்பட்டது. மகா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை, கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: