வடமதுரை கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே வடமதுரை ஊராட்சியில் பகுதி ேநர ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது.பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சி ஸ்ரீராமாபுரம் கண்டிகை மற்றும் எம்டிசி நகரில் 174 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுதான் வாங்கி வந்தனர். இந்நிலையில், உங்கள் தொகுதியில் முதல்வர் என நடந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அப்பகுதி மக்கள் நியாய விலை கடை கேட்டு அப்பகுதி மக்கள் மனு கொடுத்திருந்தனர். இதையொட்டி எம்டிசி நகரில் பகுதி நேர கூட்டுறவு விநியோக கடை புதிதாக  திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் ஊராட்சி தலைவர் காயத்திரி கோதண்டன் தலைமை தாங்கினார்.

ஊத்துக்கோட்டை தாசில்தார் ரமேஷ், துணை தாசில்தார் நடராஜன், வட்ட வழங்கல் அலுவலர் ரவி, மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, ஒன்றிய கவுன்சிலர் ஜமுனா அப்புன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பி.ஜெ.மூர்த்தி கூட்டுறவு விநியோக கடையை திறந்து வைத்து அரிசி உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.வி.லோகேஷ், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், சங்கர், வார்டு உறுப்பினர் வைசாலி பாலாஜி, பாக்கியலட்சுமி ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: