×

திருவொற்றியூர் - மணலி சாலையில் முடிவுக்கு வராத மேம்பால பணி: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மேம்பால பணிகள் 90 சதவீதம் முடிந்த நிலையில், இதர பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருவொற்றியூரில் இருந்து மணலி செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எம்ஜிஆர் நகர் அருகே பக்கிங்காம் கால்வாய் குறுக்கே மேம்பாலம் கட்டுவதற்கு நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. அதை தொடர்ந்து, கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ52 கோடி செலவில் மேம்பால பணிகள் துவங்கப்பட்டது. 530 மீட்டர் நீளம் கொண்ட இந்த மேம்பாலப் பணி 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் முடித்திருக்க வேண்டும். ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த பணி இதுவரை முடிவடையாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் திருவொற்றியூரில் இருந்து மணலி, மாதவரம் போன்ற பகுதிகளுக்கு மாநகர பேருந்து, கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பக்கிங்காம் கால்வாய் ஓரம்  அமைக்கப்பட்டுள்ள சாலை வழியாக சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் நிலை உள்ளது.இதனால் நேர விரயம் மற்றும் அலைச்சல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, அவசரத்திற்கு ஆம்புலன்ஸ், ஆட்டோ, குடிநீர் லாரி போன்ற வாகனங்கள் கூட சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், பக்கிங்காம் கால்வாய் ஓரம் உள்ள சாலையில் வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

இந்நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர் ஆகியோர்  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை சந்தித்து, இந்த மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும், என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பல மாதங்களாக கிடப்பில் இருந்த இந்த பணிகள் மீண்டும் துவங்கப்பட்டு, பாலத்தின் மேல் தளங்கள் முற்றிலுமாக முடிக்கப்பட்டன. ஆனால், 90 சதவீத பணிகள் முடிந்த நிலையில் பாலத்தின் இருபுறமும் இறங்கு பாதைகள் மற்றும் சர்வீஸ் சாலைகள், மின் விளக்குகள் போன்ற பணிகள் நடைபெறாமல் உள்ளது. விரைவில் பணிகள் முடிந்துவிடும் என்று மக்கள் மகிழ்ச்சியாக இருந்த நிலையில், மேலும் காலதாமதமாகும் சூழ்நிலையால் வேதனையடைந்துள்ளனர். எனவே, வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த மேம்பால பணியை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Tiruvottiyur- ,Manali road , Endless work on Tiruvottiyur-Manali road: Motorists suffer
× RELATED மணலி சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்