போதைப்பொருள் வழக்கில் நடிகர் கைது: பெங்களூரு போலீஸ் அதிரடி

பெங்களூரு: பெங்களூரு போலீசார் நடத்திய ரெய்டில், ஓட்டலில் போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் பாலிவுட் நடிகர் சித்தாந்த் கபூரை போலீசார் கைது செய்துள்ளனர்.கர்நாடக மாநிலம் பெங்களூரு போலீசார் நேற்று முன்தினம் இரவு நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த ஓட்டலில் நடந்த விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக 35 பேரை பிடித்து விசாரித்தனர். தொடர்ந்து அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அவர்களில் 5 பேர் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் உட்கொண்டது தெரியவந்தது. அதையடுத்து மேற்கண்ட ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அவர்களில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரரான நடிகர் சித்தாந்த் கபூரும் ஒருவராவார். ஷ்ரத்தா கபூர், பிரபாஸ் ஜோடியாக சாஹோ படத்தில் நடித்துள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ளார். ஏற்கனவே போதைப்பொருள் விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஒருவர் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்குப் பிறகு போதைப்பொருள் வழக்கில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஷ்ரத்தா கபூரிடமும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: