×

பண்ருட்டி அருகே பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ27 லட்சம் பறித்து ஓட்டம்: போலீசார் விசாரணை

பண்ருட்டி: பண்ருட்டி அருகே பத்திப்பதிவு அலுவலகத்தில் புகுந்து, ஒருவரிடம் ரூ27 லட்சத்தை மர்மநபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பெரிய எலந்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி மகன் நந்த பிரவீன் (21). இவருக்கு சொந்தமான 15 சென்ட் இடம் பண்ருட்டி அருகே சேமக்கோட்டை கிராமத்தில் உள்ளது. அந்த இடத்தை பெரிய எலந்தம்பட்டு கிராமத்தை சேர்ந்த சிவகண்டன் என்பவர் வாங்க வந்திருந்தார். இதன்பேரில் விற்பனை செய்ய ரூ47 லட்சத்துக்கு பேசி முடிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக முன்பணம் ரூ20 லட்சத்தை நந்த பிரவீன் பெற்றுக்கொண்டார். மீதி ரூ27 லட்சத்தை பத்திரம் பதிவு செய்யும்போது தருகிறேன் என சிவகண்டன் கூறியிருந்தார்.

 இதன் காரணமாக நேற்று பண்ருட்டி அருகே புதுப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நந்த பிரவின் தாயுடன் சென்றார். அப்போது சார்பதிவாளர் எதிரில் கையெழுத்து போடும்போது திடீரென அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், சிவகண்டன் கையில் இருந்த ரூ27 லட்சத்தை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பிரவீன் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில் பத்திர பதிவு அலுவலகத்தில் தான் ரூ27 லட்சம் பெறாமலேயே ஏமாற்றப்பட்டேன். பணத்தை பெற்றுத்தர வேண்டும். இல்லையெனில் பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பத்திரப்பதிவு அலுவலகத்திலேயே புகுந்து ரூ27 லட்சத்தை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Panruti , 27 lakh snatched from deed office near Panruti: Police probe
× RELATED காங்கிரஸ் வேட்பாளர் காரில் சோதனை