×

தங்கம் கடத்தல் விவகாரத்தில் உண்மைகளை சொன்னதால் பினராயால் உயிருக்கு ஆபத்து: நீதிமன்றத்தில் சொப்னா மனு

திருவனந்தபுரம்:  கேரள முதல்வர் பினராயி  விஜயனால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதால் ஒன்றிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி சொப்னா எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.தங்கக் கடத்தல் மற்றும் பணம் கடத்தல் சம்பவங்களில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர், ஐஏஎஸ் அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் சொப்னா ரகசிய வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து கேரள அரசியலில் தற்போது பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. பினராயி விஜயன் செல்லும் இடங்களில் எல்லாம் எதிர்க்கட்சியினர் மறியல் போராட்டமும்,  கருப்புக்கொடி காண்பித்தும், கொடும்பாவி எரித்தும், பிரியாணி பாத்திரங்களுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று சொப்னா சார்பில் எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக நான் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்ததற்கு பின்னர் அவரால் என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

24 மணி நேரமும் போலீசார் என்னை கண்காணித்து வருகின்றனர். இதனால் பயம் ஏற்பட்டுள்ளது. எனவே எனக்கு ஒன்றிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முன்னாள் அமைச்சர் ஜலீலின் புகாரின் பேரில் திருவனந்தபுரம் கண்டோன்மெண்ட் போலீஸ் என் மீது பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், சொப்னாவுக்கு ஒன்றிய போலீஸ் பாதுகாப்பு அளிப்பது குறித்து என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்று அமலாக்கத்துறையிடம் விளக்கம் கேட்டது. அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘தனிப்பட்ட நபருக்கு ஒன்றிய  போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது. ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டால் அது குறித்து ஒன்றிய அரசு ஆலோசிக்கும்’’ என்றார். இதையடுத்து மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

விமானத்திலும் போராட்டம் கடந்த மூன்று நாட்களாக பினராயி விஜயன் மலப்புரம், கோழிக்கோடு, திருச்சூர், கண்ணூர் ஆகிய இடங்களில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த அனைத்து இடங்களிலும் அவருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் தடியடியும் நடந்தது. 3 நாள் நிகழ்ச்சிகளை முடித்த பின்னர் பினராயி விஜயன் விமானம் மூலம் நேற்று மாலை கண்ணூரில் இருந்து  திருவனந்தபுரத்திற்கு  புறப்பட்டார். விமானம் திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய பின்னர் பினராயி விஜயன் இருக்கையிலிருந்து எழுந்தார். அப்போது திடீரென விமானத்தில் இருந்த கண்ணூர் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 2 பேர் பினராயி விஜயனை எதிர்த்து கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பினராயி விஜயன் விமான நிலையத்திலிருந்து வீட்டுக்கு காரில் புறப்பட்டார். செல்லும் வழியிலும் பல இடங்களில் அவருக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டது.



Tags : Pinarai ,Cobna , Pinaray's life in danger after telling the truth in the gold smuggling case: Sopna's petition in court
× RELATED துபாயில் இருந்து கேரளா திரும்பிய முதல்வர் பினராய்க்கு பாஜ கருப்புக்கொடி