×

மின்சார துறையில் வேலை வாங்கி தருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ரூ.27 லட்சம் மோசடி: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக மாவட்ட பொருளாளர் புகார்

சென்னை: மின் துறையில் வேலை வாங்கித்தருவதாக ரூ.27 லட்சம் பணம் பெற்று மோசடி செய்து விட்டதாக, முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது அதிமுக மீனவரணி மாவட்ட பொருளாளர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வடசென்னை அதிமுக மீனவரணி பொருளாளர் கந்தசாமி நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் புதுவண்ணாரப்பேட்டை பூண்டித்தங்கம்மாள் தெருவில் வசித்து வருகிறேன். நான் அதிமுகவில் மீனவரணி வடசென்னை மாவட்ட பொருளாளராகவும் உள்ளேன். அதிமுக ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன், மின்துறையில் வேலை வாங்கி தருகிறேன். யாராவது இருந்தால் பணத்துடன் அழைத்துவா என்று கூறினார். இதனால், உதவி இன்ஜினியராக விரும்பிய 6 பேரிடம் ரூ.27 லட்சம் பணத்தை நான் வாங்கிக் கொடுத்தேன்.

இந்த சம்பவம் நடந்து 7 ஆண்டுகள் ஆகிறது. தற்போது ஆட்சியும் மாறிவிட்டதால் வேலை கிடைக்காத காரணத்தால் அவரிடம் சென்று பணம் கேட்டேன். பணம் தருவதாக கூறிய நத்தம் விஸ்வநாதன் இதுவரை பணத்தை கொடுக்கவில்லை. அவர் உயர் பதவியில் இருந்து தற்போது நல்ல அந்தஸ்தில் இருந்ததால் சொன்ன வாக்கை காப்பாற்றுவார் என்று நினைத்தேன். அதனால், இதுவரை பணம் தரவில்லை. இந்நிலையில், பணம் கொடுத்தவர்கள் என்னை வந்து தகாத வார்த்தைகளால் திட்டி தொந்தரவு செய்கிறார்கள். இதனால் நான் மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டு என்ன  செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறேன். எனவே, நத்தம் விஸ்வநாதனிடம் என் மூலமாக கொடுத்த ரூ.27 லட்சத்தை திருப்பி வாங்கி தர ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : AIADMK ,ex ,minister ,Natham Viswanathan , AIADMK ex-minister Natham Viswanathan defrauds Rs 27 lakh of jobs in power sector: AIADMK district treasurer complains to police commissioner's office
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...