×

நெல்லை அரசு பள்ளிகளில் கலர் கயிறு கட்ட தடை புள்ளிங்கோ ஸ்டைலில் முடிவெட்டி வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு: பெற்றோர் வரவேற்பு

நெல்லை: மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளதால், நெல்லையில் நேற்று புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வெட்டி வந்த மாணவர்களுக்கு பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்டது. தமிழக பள்ளிக்கல்வித்துறை இந்த கல்வியாண்டில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிமுறைகளை  தொகுத்து வழங்கியுள்ளது. இதற்காக அரசு பள்ளிகளில் ஒரு வாரம் ஒழுக்க கல்வி குறித்த போதனைகளை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகள் நேற்று திறந்த நிலையில், மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

நெல்லையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் வாசலில் தடுத்து நிறுத்தப்பட்டு, சிகை அலங்காரம் குறித்து சோதிக்கப்பட்டது. காக்டைல் கலர் ஏற்றி முடி அலங்காரம், புள்ளிங்கோ ஸ்டைல் கட்டிங் என பல்வேறு சிகை அலங்காரத்துடன் வந்த மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கப்படவில்லை. சீரான முறையில் முடி வெட்டி வந்தால் மட்டுமே பள்ளிக்குள் அனுமதிப்போம் என உடற்கல்வி ஆசிரியர்கள் அறிவுறுத்தினர். மேலும் கைகளில் கலர் கயிறுகள் கட்டியிருந்தால் அவற்றை உடனடியாக அகற்ற கேட்டுக் கொள்ளப்பட்டது.

செயின், பிரேஸ்லெட், காதுகளில் தோடு அணிந்து வந்த மாணவர்கள் நாளை முதல் அவற்றை அணிந்து வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. நகங்களை முறையாக வெட்டி வரவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. விதிமுறைகள் காரணமாக பல பள்ளிகளில் மாணவர்கள் முதல் நாளன்று வகுப்பறைக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. சீருடை அணியாத மாணவர்கள் பள்ளிக்கு வெளியே அப்படியே திருப்பி அனுப்பப்பட்டனர். சில பள்ளிகளில் மாணவர்களுக்கான ஒழுக்க விதிமுறைகள் குறித்து பிளக்ஸ் போர்டுகளும் வைக்கப்பட்டிருந்தன. முதல்நாள் என்பதால் பள்ளிக்கு வந்திருந்த பெற்றோர் இந்த நடவடிக்கைகளை வரவேற்று மகிழ்ச்சியோடு சென்றனர்.

* பிறந்த நாளிலும் கலர் டிரஸ் கிடையாது
பள்ளி கல்வித்துறை தற்போது பிறப்பித்துள்ள புதிய உத்தரவில் மாணவ, மாணவிகள் தங்கள் பிறந்த நாளிலும் பள்ளிக்கு கலர் டிரஸ் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இதை தெரிவித்து, இனி வருங்காலங்களில் பிறந்த நாளில் கூட சீருடை அணிந்தே மாணவர்கள் வர வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Tags : Nellie ,Pullingo , Pullingo-style students banned from tying color rope in Nellai government schools denied admission: Parents welcome
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...