×

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எதிரொலி சென்னை விமானங்களில் பல மடங்கு கட்டண உயர்வு: பயணிகள் கடும் அதிர்ச்சி

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு காரணமாக தூத்துக்குடி, திருவனந்தபுரம், மதுரை, திருச்சி, கோவை ஆகிய  விமானங்களில் பல மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது. இது, பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு, குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு சென்ற மக்கள் ஒட்டுமொத்தமாக தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்னைக்கு திரும்பினர். இதனால் கடந்த சில தினங்களாகவே பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதியது.

பயணிகள் சென்னை திரும்புவதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை, 1,450 கூடுதல் பஸ்களை இயக்கியது. ஆனாலும் தனியார் பஸ்களில் டிக்கெட் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி வசூலிக்கின்றனர். அதேபோல் ரயில்களிலும் சாதாரண டிக்கெட் முடிந்ததால், தக்கல், பிரிமியம் தக்கல் என கட்டணங்களை உயர்த்தி வசூலிக்கின்றனர். மேலும், சிறப்பு ரயில்கள் என்ற பெயரில், கிட்டத்தட்ட தனியார் ஆம்னி பஸ் அளவுக்கு டிக்கெட் கட்டணங்களை வசூலித்து ரயில்கள் இயக்கப்படுகின்றன.

பஸ், ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள், இறுதி நேரங்களில் விமானங்களில் சென்னைக்கு திரும்பினர். குறிப்பாக தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தூத்துக்குடி, திருவனந்தபுரம் விமானங்களிலும் மற்றும் திருச்சி, மதுரை, கோவை போன்ற விமானங்களிலும் அதிகளவில் பயணிகள் நேற்றுமுன்தினம் இரவு முதல் சென்னைக்கு வந்தனர். இதில், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை மற்றும் திருவனந்தபுரம் போன்ற இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதனால் விமான கட்டணங்களும், நேற்றிலிருந்து பல மடங்கு உயர்த்தப்பட்டது.

தூத்துக்குடியில் இருந்து சென்னை வர சாதாரண நாட்களில் கட்டணம் ரூ.3,500-4,000. ஆனால் நேற்று தூத்துக்குடியில் இருந்து சென்னை வர ரூ.12 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து வர ரூ.28 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது. சாதாரண நாட்களில் ரூ.3,500-4,500. அதேபோல் மதுரையில் இருந்து வர ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.11 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. திருச்சியில் இருந்து வருவதற்கு அதிகபட்ச கட்டணமாக நேற்று
ரூ. 13,150 வசூலிக்கப்பட்டது. கோவையில் இருந்து சாதாரணமாக ரூ.3,500- ரூ.4,500 கட்டணம். ஆனால் நேற்று முன்தினமும், நேற்றும் ரூ.8,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது.

டெல்லி, பெங்களூரு, ஐதராபாத் போன்ற இடங்களில் இருந்து வரும் விமானங்களில் கட்டணம் இந்த அளவுக்கு உயர்த்தப்படவில்லை. ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.2 ஆயிரம் வரைதான் உயர்த்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இயக்கப்படும் விமானங்களில்தான் 3 மடங்கு வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபற்றி விமான நிறுவன வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘விமானங்களுக்கான எரிபொருள் விலை தற்போது பலமடங்கு அதிகரித்துவிட்டது. அதுமட்டுமின்றி தற்போது, சென்னை விமான நிலையத்தில் விமானம் வந்து தரை இறங்க கட்டணம், விமானத்தை சென்னை விமான நிலையத்தில் நிறுத்துவதற்கான கட்டணம், பயணாளிகள் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு விதமான கட்டணங்களை இந்திய விமான நிலைய ஆணையம் மிக அதிகமாக உயர்த்தியுள்ளது. அவைகளை சமாளிக்க  டிக்கெட் கட்டணங்களை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை’ என தெரியவந்தது.

Tags : Tamil Nadu ,Chennai , Echoes of school opening in Tamil Nadu Multiple fare hikes on Chennai flights: Passengers shocked
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...