கோயில் திருப்பணி என்ற பெயரில் கார்த்திக் கோபிநாத் கணக்கில் ரூ.3 லட்சத்துக்கும் மேல் வசூல்: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

சென்னை: பாஜ ஆதரவாளரும், யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் கோயில் திருப்பணி என்ற பெயரில் தனது தனிப்பட்ட வங்கி கணக்கில் ரூ.3 லட்சத்துக்கும் மேல் வசூலித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்து, அதை கோயில் பணிகளுக்கு பயன்படுத்தாமல் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தியதாக சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ்  மற்றும் கோயிலின் செயல் அலுவலர் ஆகியோர் பாஜ ஆதரவாளரும்,யூடியூபருமான கார்த்திக் கோபிநாத்துக்கு எதிராக ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில்  கடந்த மே 29ம் தேதி கைது செய்யப்பட்ட கார்த்திக் கோபிநாத்துக்கு பூந்தமல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

பின்னர், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கார்த்திக் கோபிநாத் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோகுல், மிலாப் கணக்கு அல்லாமல் தனது தனிப்பட்ட வங்கி கணக்கின் மூலம் கோயில் திருப்பணி என்ற பெயரில் மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் கார்த்திக் கோபிநாத் வசூலித்ததாக தெரிவித்தார். கார்த்திக் கோபிநாத் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகவாச்சாரி, கடந்த முறை 28 லட்சம் என்று தெரிவித்து விட்டு தற்போது 3 லட்சம் என காவல்துறை குறிப்பிடுவதாக தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, கார்த்திக் கோபிநாத்தின் வங்கிக் கணக்கு விவரங்களை விரிவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Related Stories: