தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் வெகுவாக தலைதூக்கும் எரிபொருள் தட்டுப்பாடு: செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?.. என கேள்வி

டெல்லி: தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு தலைதூக்க தொடங்கியுள்ளது. இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது செயற்கை தட்டுப்பாடா? எனவும் கேள்வி எழுந்துள்ளது. நாட்டில் எரிபொருள் விலை உயர்ந்த நிலையில் கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்தது. இதனால் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தங்களுக்கு ஏற்படும் இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் ஈடுகட்ட வேண்டும் என கோரின. இந்த பிரச்சனைக்கு மத்தியில் கடந்த ஒரு மாதமாக பெட்ரோல், டீசல் சப்ளையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 4,500 பெட்ரோல் பங்குகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வரைவோலையுடன் எண்ணெய் நிறுவனங்களில் காத்து கிடக்கின்றனர்.

ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் தட்டுப்பாட்டுக்கு இடையே அச்சத்திலும் பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் குவிகின்றனர். தமிழ்நாட்டிலும் புறநகர் பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ஏராளமான பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. சில இடங்களில் லாரி உரிமையாளர்களுக்கு டீசல் குறிப்பிட்ட அளவே வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எரிபொருள் விலை தற்போது நிலையாக உள்ளதால் எண்ணெய் நிறுவனங்கள் சப்ளையை குறைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒன்றிய அரசு உடனடியாக இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என லாரி உரிமையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

பெட்ரோல், டீசலுக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பும் லாரி உரிமையாளர்கள் உரிமையாளர்கள் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் எண்ணெய் நிறுவனங்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகள் தீர்க்க வேண்டும் என கோருகின்றனர். இந்த தட்டுப்பாடு அபாய கட்டத்தை எட்டாமல் விரைந்து தீர்வு காண வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: