சேலம் கோட்டை பெருமாள் கோயில் வைகாசி திருவிழா தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

சேலம்: சேலம் கடைவீதியில் இன்று காலை கோட்டை பெருமாள் கோயில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

சேலம் கோட்டை அழகிரிநாத பெருமாள் கோயிலில், ஆண்டுதோறும் வைகாசி மாத திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு திருவிழா கடந்த 4ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் சேனாதிபதி உற்சவம், முகம் வாசித்தல், அங்குரார்ப்பணம் மற்றும் யாகசாலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து 5ம் தேதி புஷ்ப பல்லக்கு ஊர்வலம், கொடியேற்றம், அன்ன வாகன திருவீதி உலா நடந்தது.

நேற்று வரை 7 நாட்களுக்கு தினமும் காலையில் வெள்ளி பல்லக்கிலும், மாலையில் சிறப்பு வாகனத்திலும் அழகிரிநாத பெருமாள் திருவீதி உலா நடந்தது.திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடந்தது. இதற்காக அதிகாலை 5.45 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, கோயிலில் இருந்து டவுன் கடைவீதி ராஜகணபதிகோயில் முன்புள்ள தேர்மண்டபத்திற்கு சுவாமியை ஊர்வலமாக கொண்டு வந்தனர். தேரில் ஏறிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகளை செய்தனர். காலை 9 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், அம்மாபேட்டை மண்டலக்குழு தலைவர் தனசேகரன், கவுன்சிலர்கள் ஏ.எஸ்.சரவணன், பௌமிகா தப்சீரா, ஆர்டிஓ விஷ்ணுவர்த்தினி, தாசில்தார் செம்மலை உள்ளிட்டோர் கலந்துகொண்டு வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு வடம் பிடித்து கோவிந்தா, கோவிந்தா முழக்கத்துடன் தேர் இழுத்தனர். 2வது அக்ரஹாரம், பட்டைகோயில், சின்னக்கடைவீதி வழியே மீண்டும் நிலையத்திற்கு தேர் வந்தடைந்தது. இத்தேரோட்டத்தையொட்டி, கடை வீதிகளுக்கு வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை.

இதனால், டவுன் கடைவீதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானத்தை முக்கியஸ்தர்கள் பலரும் வழங்கினர். முன்னதாக இவ்விழாவில் அதிமுக எம்எல்ஏ பாலசுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ சக்திவேல் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். வைகாசி திருவிழாவில் நாளை (14ம் தேதி) தீர்த்தவாரி உற்சவமும், 15ம் தேதி இரவு சத்தாபரணமும், 16ம் தேதி வசந்த உற்சவமும் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அமுதசுரபி தலைமையில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.

Related Stories: