×

சென்னை அருகே ரூ.165 கோடி மதிப்பீட்டில் 6 அவசரகால வெள்ள கடத்தும் கால்வாய்கள் பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் துரைமுருகன்

சென்னை: சென்னை அருகே ரூ.165 கோடியில் செம்மஞ்சேரி கால்வாய், ஒட்டியம்பாக்கம் ஓடை மற்றும் மதுரப்பாக்கம் ஓடைகளை பள்ளிக்கரணை கழிவெளி வரை இணைத்திட 6 அவசரகால வெள்ள கடத்தும் கால்வாய்கள் 6 பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

சென்னை அருகே செம்மஞ்சேரி கால்வாய், ஒட்டியம்பாக்கம் ஓடை, மதுரப்பாக்கம் ஓடைகளை பள்ளிக்கரணை கழிவெளி வரை இணைக்கும் வகையில் அவசர கால வெள்ளக் கடத்தும் கால்வாய்கள் 6 பணிகளை ரூ.165 கோடி மதிப்பில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் கு.இராமமூர்த்தி, கண்காணிப்புப் பொறியாளர் எ.முத்தையா, செயற்பொறியாளர் செல்வ குமார், மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர்கள் எஸ்.இ. ரவிச்சந்திரன், வி. மதியழகன், பெரும்பாக்கம் ஊராட்சித் தலைவர் சுகாசினி ரங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் நீர்வளத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது குறிப்பிட்டதாவது: “செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மற்றும் வண்டலூர் வட்டத்தில் உள்ள மதுரப்பாக்கம் ஓடை மற்றும் ஒட்டியம்பாக்கம் ஓடை முக்கியமான வெள்ள வடிகால்வாய் ஆகும். இவ்வோடைகள் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து கிடைக்கப்படும் ஏரிகளின் உபரிநீர் மற்றும் மழைநீர் வடிந்து மேற்கண்ட கால்வாய்கள் வழியாக பள்ளிக்கரணை கழுவெளி சென்றடையும் வகையில் உள்ளது.

மேற்கண்ட இரு ஓடைகளும் 2015 ஆண்டின் வெள்ளப்பெருக்கில் சுமார் 3000 கன அடிக்கு மேல் வெள்ள நீர் வடிந்து கழிவெளியினை அடைந்து ஒக்கியம் மடுவு மற்றும் பக்கிங்காம் கால்வாய் வழியாக முட்டுக்காட்டில் கடலில் சென்று கலக்கின்றது. செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளின் மேற்பகுதியில் வண்டலூர் காடுகளிலிருந்து அமைந்துள்ள 35 ஏரிகளின் வெள்ள உபரிநீரானது மதுரப்பாக்கம் ஓடை மற்றும் ஒட்டியம்பாக்கம் ஓடையின் வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தெற்குப் பகுதியில் சென்றடையுமாறு இயற்கையாக அமைந்திருந்தது.

நிலவியல் அமைப்பு மற்றும் வருவாய்த்துறை ஆவணங்களின்படி இக்கால்வாய்கள் செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளின் பட்டா நிலங்கள் மற்றும் அரசு நஞ்சை தரிசு நிலங்களின் வழியாக பரவி ஓடி பள்ளிக்கரணை கழுவெளியில் கலந்து வந்தது. மேற்கண்ட ஓடைகளிலிருந்து டி.எல்.எப் குடியிருப்புக்கு வடமேற்கு பகுதிக்கு மேல் கால்வாய் தொடர்ச்சி இல்லாமல் இருப்பதினால், வெள்ள நீர்க் குடியிருப்பு பகுதிகளில் பரவி அதன் சுற்றுப்புற பகுதிகளில் மழைக்காலங்களில் சுமார் 3 முதல் 5 அடி அளவில் தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.

நகரமயமாதலால் பட்டா நிலங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டதாலும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டதாலும், ஒட்டியம்பாக்கம் மற்றும் மதுரப்பாக்கம் ஓடையிலிருந்து வரும் வெள்ள நீர் இயற்கையாக பட்டா மற்றும் தரிசு நிலங்களின் மேல் பரவி ஓடி கழுவெளியில் கலக்க முடியாமல் குடிசைமாற்று குடியிருப்பு மற்றும் DLF Garden City மேற்குப் பகுதியில் வெள்ள நீர்த் தேங்கி சாலைகள் வழியாக ஓடி இப்பகுதிகளுக்கு மிகுந்த வெள்ளச் சேதம் ஏற்படுத்துகிறது.

மதுரப்பாக்கம் ஓடையிலிருந்து வரும் உபரிநீர் காரணை புல எண்.109 வரை வரையறுக்கப்பட்ட கால்வாயாக சென்று பின்பு தொடர்ச்சி கால்வாய் இல்லாததினால் டி.எல்.எப். குடியிருப்பு மற்றும் அதன் சுற்றுப்புற பட்டா நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்று பாதிப்புக்குள்ளாக்குகின்றது. அதேபோல், ஒட்டியம்பாக்கம் ஏரியிலிருந்து வரும் உபரிநீர் புல எண்.254 வரை வரையறுக்கப்பட்ட கால்வாயாக சென்று தொடர்ச்சி கால்வாய் இல்லாததினால் அரசன்கழனி பெரும்பாக்கம் கிராமங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு பெரும் பாதிப்புக்குள்ளாக்குகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு வருடமும் மக்கள் இவ்வாறு பாதிப்புக்குள்ளாவதை தவிர்க்கும் வகையில் மழைக்காலத்திலே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் வெள்ள பாதிப்புக்குள்ளான இந்த இடங்களை 29.11.2021 மற்றும் 01.12.2021 ஆகிய தேதிகளில் இரண்டு முறை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து நிரந்தரத் தீர்வு காண நீர்வளத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.

அதன் அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அரசு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தற்போது ரூ.165.35 கோடி மதிப்பில் இவ்விடத்தில் 6 பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இப்பணிகள் நிறைவடைந்த பிறகு ஒவ்வொரு வருடமும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் இப்பகுதிகள் வெள்ளப் பாதிப்பிலிருந்து தவிர்க்கப்படும்” என தெரிவித்தார்.

Tags : Minister ,Thurimurugan ,Chennai , Minister Duraimurugan inaugurates 6 emergency flood canals near Chennai at a cost of Rs 165 crore
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்