மனைவி, குழந்தைகளுடன் பொற்கோயிலுக்கு சென்றவர் சுட்டுக் கொலை; பஞ்சாப்பில் பயங்கரம்

அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பொற்கோயிலுக்கு சென்றவர், கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரின் செஹர்தா பகுதியைச் சேர்ந்த ஹரிந்தர் சிங் கடந்த சில ஆண்டாக துபாயில் பணியாற்றி வந்தார். கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு அமிர்தசரஸில் உள்ள வீட்டுக்கு வந்தார். நேற்று அவர் பொற்கோயில் அமைந்துள்ளள ஹர்மந்திர் சாஹிப் என்ற இடத்திற்கு தனது பைக்கில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த இருவர், ஹரிந்தரின் பைக்கை வழிமறித்து தம்பதி மற்றும் குழந்தைகள் அணிந்திருந்த நகைகளை பறிக்க முயன்றனர். கொள்ளையர்களை ஹரிந்தர் தாக்கினார். இதனால் இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது திடீரென கொள்ளையர்களில் ஒருவன், ஹரிந்தரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு இருவரும் தப்பினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஹரிந்தரை அப்பகுதியினர மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இச்சம்பவம் குறித்து அமிர்தசரஸ் போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: