புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி: எடப்பாடி பழனிசாமி பேசாமல் சென்றதால் நிர்வாகிகள் அதிருப்தி

சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசலில், தமிழகத்தில் முதல் முறையாக அதிமுகவில் நடந்த உட்கட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட கிளை கழக நிர்வாகிகளுக்கான அங்கீகாரம் கடிதம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. தலைவாசல் அதிமுக ஒன்றிய அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட கிளை கழக நிர்வாகிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

அப்போது, அவர் எதுவுமே பேசாமல் சான்றிதழ்களை மட்டுமே வழங்கி விட்டு சென்றது நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதுபோன்று கிளை கழக நிர்வாகிகளுக்கான அங்கீகாரம் கடிதத்தை அதிமுக நேரடியாக வழங்குவது நடைமுறையில் இல்லாத நேரத்தில், தற்போது முதல் முறையாக அங்கீகாரம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், இணை ஒருங்கிணைப் பாளர் எடப்பாடி பழனிசாமி ஏதேனும் கருத்து கூறுவார் என நினைத்திருந்த நேரத்தில் மவுனம் சாதித்து சென்றது ஏன் என்று புரியவில்லை என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நிருபர்கள் சந்திப்புக்கு கேட்டபோது, தற்போது நடந்த நிகழ்ச்சியை புகைப்படமாக போடுங்கள். தற்போது அதிகளவில் என்னுடைய புகைப்படம் பத்திரிகையில் வருவதில்லை என மழுப்பிய படியே சென்று விட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் இளங்கோவன், எம்எல்ஏக்கள் ஜெயசங்கரன், நல்லதம்பி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: