மின்சார சபை தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ ராஜினாமா: இலங்கையில் பரபரப்பு

கொழும்பு: இலங்கை மின்சார சபை தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கையின் மின்சார சட்டத்தின்படி பெரிய மின் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றால், அதற்கு முறையாக டெண்டர் விடப்பட வேண்டும். ஆனால், கடந்த 23 ஆண்டுகால் சட்டத்தில் அந்நாட்டு அரசு மாற்றம் செய்துள்ளது. அதாவது கடந்த வியாழக்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் ஆளும் இலங்கை பொதுஜன கட்சியின் சார்பில் மின்சார சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட திருத்தம்படி, புதிய மின் ஒப்பந்தங்களை மேற்கொள்ள வசதியாக, எவ்வளவு பெரிய திட்டமாக இருந்தாலும் முறையான டெண்டர் விட வேண்டியது அவசியமில்லை. மாறாக ஆளும் அரசு யாருக்கு டெண்டர் கொடுக்க நினைக்கிறதோ, அவர்களுக்கு கொடுக்கலாம்.

இந்த சட்ட திருத்தத்திற்கு 120 எம்பிக்கள் ஆதரவாக வாக்களித்தனர். எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இந்த சட்ட திருத்தத்தை கடுமையாக எதிர்த்தது. சட்ட திருத்தத்திற்கு எதிராக 36 எம்பிக்கள் வாக்களித்தனர். பிரபல இந்திய தொழிலபதிபர் அதானி நிறுவனத்துடன் மின்சார ஒப்பந்தத்தை மேற்கொள்ள வசதியாக, மின்சார சட்டம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டி உள்ளது. மேலும், மின்சார தொழிற்சங்கங்களும் இந்த புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கை மின்சார வாரியத்தின் தலைவர் பெர்டினான்டோ, இவ்விவகாரம் குறித்து இலங்கை மின்சார வாரியத்தின் நாடாளுமன்றக் குழுவிடம் கூறுகையில், ‘அதானி நிறுவனத்துடன் கடந்தாண்டு 500 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இலங்கையின் வடகிழக்கு பகுதியில் இந்த மின்சார உற்பத்தி திட்டம் அமைய உள்ளது. இந்த ஒப்பந்தத்தை அதானியிடம் கொடுக்கும்படி அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம், இந்திய பிரதமர் மோடி தெரிவித்ததாக, என்னிடம் அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்தார்’ என்று கூறியிருந்தார். இந்நிலையில் இலங்கை மின்சார சபை தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தனது பதவியை ராஜினாமா செய்தார். எம்.எம்.சி. பெர்டினாண்டோ ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக மின்சாரத்துறை அமைச்சர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: