×

15 ரன் குறைவாக எடுத்துவிட்டோம்: கேப்டன் ரிஷப் பன்ட் புலம்பல்

கட்டாக்: இந்தியா- தென்ஆப்ரிக்கா இடையே 2வது டி.20 போட்டி கட்டாக்கில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 40, இஷான் கிஷன் 34, தினேஷ் கார்த்திக் 30 ரன் அடித்தனர். பின்னர் களம் இறங்கிய தென்ஆப்ரிக்க அணி 18.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக கிளாசென் 46 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 81 ரன் விளாசினார். கேப்டன் பவுமா 35, டேவிட் மில்லர் 20 ரன் அடித்தனர். இந்திய பந்துவீச்சில் புவனேஸ்வர்குமார் 4 விக்கெட் வீழ்த்தினார். கிளாசென் ஆட்டநாயகன் விருதுபெற்றார். இந்த வெற்றி மூலம் 2-0 என தென்ஆப்ரிக்கா முன்னிலை வகிக்க 3வது போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடக்கிறது. வெற்றிக்கு பின் தென்ஆப்ரிக்க கேப்டன் பவுமா கூறுகையில், இது ஒரு தந்திரமான சேசிங்.

புவி நன்றாக பந்து வீசினார். எங்கள் முன் பந்தை பேச வைத்தார். இருப்பினும், இறுதியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிபெற்றோம். போட்டியை கடைசிவரை எடுத்து செல்ல ஒருவர் தேவைப்பட்டார். அதனை நான் செய்ய விரும்பினேன். ஆனால், முடியவில்லை. இன்றைய போட்டியிலிருந்து, போட்டியை கடைசிவரை எடுத்துச் செல்வது எப்படி என்பதை ஒரு பாடமாக கற்றேன்’ இலக்கு எளிதாக இருந்தாலும், துரத்துவது கடினம் என்றுதான் கருதினோம்.

வெற்றிபெற்றுவிடுவோம் என நாங்கள் உறுதியாக இருந்தோம். கிளாசென் அதிரடியாக விளையாடி பினிஷராக இருந்தார். அவரால் அணியின் பேட்டிங் வரிசைக்கு வலு சேர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. மில்லரும் சிறந்த பினிஷர்தான். திட்டத்தை சரியாக செயல்படுத்தினாலே, சுலபமாக வெற்றியைப் பெற்றுவிட முடியும், என்றார். இந்திய அணி கேப்டன் ரிஷப் பன்ட் கூறுகையில், “நாங்கள் 10-15 ரன் குறைவாக எடுத்துவிட்டோம்.

புவனேஷ்வர் உள்பட அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் முதல் 8 ஓவர்களை சிறப்பாக வீசினர். ஆனால் அதன்பிறகு எதுவும் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை, நாங்கள் திட்டமிட்டிருந்த படியும் எதுவும் நடக்கவில்லை. போட்டியின் 2வது பாதியில் எங்களால் விக்கெட்டுகள் வீழ்த்த முடியவில்லை. பவுமா, கிளாசென் சிறப்பாக பேட்டிங் செய்தனர். பந்துவீச்சில் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்.

அடுத்த போட்டியில் தவறுகளை சரி செய்து கொள்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. எஞ்சியுள்ள 3 போட்டியிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் உள்ளதால், வெற்றிக்காக கடுமையாக முயற்சிப்போம்” என்றார்.

Tags : Rishabh Punt , We took less than 15 runs: Captain Rishabh Punt laments
× RELATED பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்: கேப்டன் ரிஷப் பன்ட் பாராட்டு