×

பூதலூர் அருகே பொன்னேர் பூட்டி, வயலை உழுது, நெல் விதைக்கும் பணி-விவசாயிகள் மும்முரம்

வல்லம் : தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே விவசாயிகள் நேற்று பொன்னேர் பூட்டி வயலை உழுது நெல் விதைக்கும் பணிகளை தொடங்கினர்.குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் கோடைக்காலத்திலேயே தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே செல்லப்பன்பேட்டை பகுதியில் விவசாயிகள் பொன்னேர் பூட்டும் நிகழ்ச்சியை மேற்கொண்டனர்.

ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு மே மாதம் 24ம் தேதியே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து கல்லணையிலிருந்து 27ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் ஆறு, வாய்க்கால்களில் வர தொடங்கி உள்ளது. இதையடுத்து விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் மும்முரம் அடைந்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே விவசாயிகள் தங்கள் குலதெய்வ கோயிலுக்கு வருகை தந்து விதை நெல், ஏர் கலப்பை, மாட்டு வண்டி ஆகியவற்றுடன் ஊர்வலமாக செல்லப்பன்பேட்டை பகுதியில் உள்ள வயலுக்கு சென்று அங்கும் வழிபாடு நடத்தினர். பின்னர் ஏர் கலப்பை பூட்டி வயலை உழுது விதை நெல்லை விதைத்தனர். இந்த ஆண்டு நல்ல மழை பெய்து குறுவை, சம்பா, தாளடி என்று முப்போக நெல் சாகுபடி நடைபெற வேண்டும்.

மேலும் கரும்பு, எள், வாழை, பருத்தி, கடலை உட்பட அனைத்து பயிர்களும் நன்கு விளைந்து விவசாயிகள் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்று வழிபாடு நடத்தினர். முன்னதாக ஏர் கலப்பை மண்வெட்டி உள்ளிட்டவை செய்யக்கூடிய கொல்லம் பட்டறை வைத்து பூஜை செய்து குலதெய்வ வழிபாட்டினை செய்து தங்கள் வயல்களில் எருதுகளை ஏர்கலப்பையில் பூட்டி வயல்களை உழுது பணியை தொடங்கினர்.

Tags : Puthalur , Vallam: Farmers near Puthalur in Tanjore district started plowing paddy fields and sowing paddy.
× RELATED பூதலூரில் முதியவர் பைக்கில் ரூ.1.50லட்சம் திருட்டு