வைகாசி விசாக திருவிழா திருமூர்த்தி மலையில் குவிந்த பக்தர்கள்

உடுமலை: வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி மலையில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். வைகாசி  மாதம் விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் அவதரித்தார். இந் நாளை முருக  பக்தர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். உடுமலையை அடுத்த திருமூர்த்தி  மலை மீது அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோவிலில் சிவன், பிரம்மா,  விஷ்ணு வுடன் விநாயகர், முருகன் ஆகிய சாமிகளுக்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளன.

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே  முருகக் கடவுளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. உற்சவருக்கு பால்,  இளநீர், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட 26 வகையான திரவியங்களால்  அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சாமிக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு  சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து  கொண்டனர். முன்னதாக உடுமலை சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து ஏராளமான முருக  பக்தர்கள் பாதயாத்திரையாக திருமூர்த்திமலை நோக்கி வந்தனர்.

அவர்களில் சிலர்  பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்து முருகனுக்கு நேர்த்திக் கடன்களை  நிறைவேற்றினர்.கோடை விடுமுறையின் கடைசி நாளாகிய இன்று வெளி  மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலை  பஞ்சலிங்க அருவியை காண குவிந்ததால் மலைமீது போக்குவரத்து நெரிசல்  அதிகரித்து காணப்பட்டது.

Related Stories: