×

கடமலை-மயிலை ஒன்றியத்தில் கழிவுநீரால் கலங்கும் மூல வைகையாறு-சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கோரிக்கை

வருசநாடு : கடமலை மயிலை ஒன்றியத்தில் மூல வைகையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடமலை மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூல வைகையாறு உற்பத்தியாகிறது. வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் மூல வைகையாற்றில் நீர்வரத்து காணப்படும். கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மூல வைகையாறு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

இது தவிர மூல வைகையாற்றை சார்ந்து ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடக்கிறது.இந்நிலையில் கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, தங்கம்மாள்புரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அனைத்தும் மூல வைகை ஆற்றில் கலந்து வருகிறது. இதனால் மூலம் வைகை ஆற்று நீர் தொடர்ந்து மாசடைந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் தமிழ் ஆனி மாதம் இறுதியில் இருந்து புரட்டாசி மாதம் வரை மழைக்காலம் என்பதால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படும். அதுபோன்ற நேரங்களில் மூல வைகை ஆற்றில் சாக்கடை கழிவுநீர் குளம் போல தேங்கி காணப்படும். பின்னர் மழை பெய்து நீர் வரத்து ஏற்படும் போது அதனுடன் கழிவு நீரும் சேர்ந்து குடிநீரை மாசுபடுத்துகிறது.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘மூல வைகை ஆற்றில் நீர்வரத்து தொடங்கும் முதல் இரண்டு வாரங்கள் கழிவுநீர் கலந்த குடிநீரை குடிப்பதால் பொதுமக்களுக்கு டைபாய்டு காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் நிலை குறைவு ஏற்படுகிறது. எனவே மூல வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வகையில் அனைத்து கிராமங்களையும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும். ஆனால் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் வெயில் காலம் தொடங்கி விட்டதால் தற்போது மூல வைகை ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. அடுத்த சில நாட்களில் நீர் வரத்து முற்றிலுமாக நின்றுவிடும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள கிராமங்கள் அனைத்திலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும்’’ என்றனர்.



Tags : Kadamalai-Mayilai Union , Varusanadu: It is natural that appropriate action should be taken to prevent the mixing of sewage in the source water in the Kadamalai Peacock Union.
× RELATED கடமலை-மயிலை ஒன்றியத்தில் களைகட்டும்...