×

காரமடை அருகே மின்வேலியை தகர்த்து உள்ளே சென்றன 700 வாழைகளை சேதப்படுத்திய யானைகள் கூட்டம்-வனத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த முடிவு

மேட்டுப்பாளையம் : கோவை அருகே மின்வேலியை தகர்த்து தோட்டத்துக்குள் புகுந்த 7 யானை கூட்டம் 700 வாழை மரங்களை சேதப்படுத்தின.கோவை மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் வாழை விவசாயம் அதிகமாக செய்யப்படுகிறது. வாழை குலைதள்ளி காய் திரண்டு அறுவடைக்கு தயராகும் நிலையில் உணவு, குடிநீர் தேடி வரும் காட்டுயானைகள் தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை தின்றும், மிதித்தும் நாசம் செய்து விடுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.

குறிப்பாக, காரமடை வனப்பகுதியையொட்டி உள்ள தோலம்பாளையம், வெள்ளியங்காடு உள்ளிட்ட கிராமங்களில் காட்டுயானைகள் அதிகளவு சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை தோலம்பாளையம் மணல்காடு என்ற இடத்தில் முகாமிட்ட 7 காட்டுயானை கூட்டம்  ராமசாமி என்பவரது தோட்டத்துக்கு புகுந்தது.அங்கு அவர் வாழை பயிரிட்டிருந்தார்.
வாழைகள் அறுவடைக்கு தயாராகும் நிலையில் இருந்தது. வனவிலங்குகள் தொல்லையில் இருந்து வாழைகளை பாதுகாக்க சோலார் மின்வேலி அமைத்திருந்தார்.

அங்கு வந்த யானை கூட்டம் மின்வேலியை தகர்த்து உள்ளே புகுந்தது. அங்கிருந்த வாழைகளை 7 காட்டுயானைகள் தின்றும், மிதித்தும் நாசம் செய்தது. யானை கூட்டம் வாழைத்தோட்டத்தில் புகுந்ததை அறிந்த விவசாயி ராமசாமி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சத்தம்போட்டு யானை கூட்டத்தை விரட்டியடித்தார். ஆனால், சுமார் 700க்கும் மேற்பட்ட வாழைகளை காட்டுயானைகள் நாசம் செய்தது தெரியவந்தது. வாழைத்தோட்டம் முழுவதும் புயல்கடந்த பூமி போன்று காட்சி அளித்தது. கடன் வாங்கி வாழை விவசாயம் செய்து கைகூடி வரும் நிலையில் காட்டுயானை நாசம் செய்ததால் ராமசாமி குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் வேணுகோபால் கூறியதாவது:  காட்டுயானை அட்டகாசத்தால் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை இங்கு நிலவுகிறது. ஆனால், வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காட்டுயானைகளை அடர்ந்த வனத்துக்குள் விரட்ட வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
யானைகள் சேதப்படுத்திய பயிர்களை வனத்துறை அலுவலகம் முன்பு கொட்டி போராட்டம் நடத்த உள்ளோம். ஒரு வாழை பயிரிட்டு முதிர்வு வரை சுமார் ரூ.500 தேவைப்படுகிறது. எனவே, உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Karamada—the ,Forest Office , Mettupalayam: A herd of 7 elephants destroyed an electric fence near Coimbatore and damaged 700 banana trees.
× RELATED வெள்ளிங்கிரி மலை ஏறுபவர்களுக்கு வனத்துறையினர் அறிவுரை