உடுமலை-மூணாறு சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம்-வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

உடுமலை :  உடுமலை-மூணாறு சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்

உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில், ஒன்பதாறு செக்போஸ்டில் இருந்து சின்னாறு வரை இருபுறமும் உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான யானைகள் உள்ளன.

கோடை காலத்தில் தண்ணீர் தேடி யானைகள் மூணாறு சாலையை கடந்து அமராவதி அணைக்கு செல்வது வழக்கம். மேலும், சாலையிலும் நீண்ட நேரம் உலா வரும். தற்போது, கோடை முடிந்த நிலையிலும், மூணாறு சாலையில் கடந்த சில நாட்களாக யானைகள் உலா வருகின்றன. குறிப்பாக, புங்கன் ஓடை, எஸ்.பெண்ட் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் கூட்டமாக யானைகள் நிற்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் காத்திருந்து யானைகள் சென்றபின் செல்கின்றனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்,``யானைகள் சாலையில் நிற்பதால் வாகன ஓட்டிகள் ஹாரன் அடிப்பது, வாகனங்களை நிறுத்தி செல்போனில் படம் பிடிப்பது, கூச்சலிடுவது என தொந்தரவு செய்யக்கூடாது. அமைதி காத்தால் சிறிது நேரத்தில் தானாகவே யானைகள் காட்டுக்குள் சென்றுவிடும். வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும்’’ என எச்சரித்துள்ளனர்.

Related Stories: