×

வேடந்தாங்கல் ஊராட்சியில் உள்ள துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

மதுராந்தகம்: வேடந்தாங்கல் ஊராட்சியில் உள்ள, துணை சுகாதார நிலையம் தரம் உயர்த்தி சுற்றுலாப் பயணிகளுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையமாக அமைக்க வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் கிராமத்தில், தமிழ்நாட்டிலேயே புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் உள்ளது. இதனால், இங்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் மழை பெய்து ஏரியில் தண்ணீர் நிரம்பியவுடன் அங்கு பல்லாயிரக்கணக்கான பறவைகள் இனப்பெருக்கத்திற்காக மரங்களில் தங்கி இருக்கும். அப்போது, பறவைகளைக்காண சுற்றுலா பயணிகளுக்கு நவம்பர் மாதம் சரணாலயம் திறக்கப்படுகிறது. ஜூன் மாதம் வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஏரியில் உள்ள மரங்களில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பறவைகளை கண்டு களித்து செல்கின்றனர்.

இந்நிலையில், வேடந்தாங்கல் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.  இங்கு, ஒரே ஒரு செவிலியர் மட்டுமே உள்ளார். அந்த செவிலியர் அருகிலுள்ள 7 கிராமங்களுக்கு நேரில் சென்று மருந்து, மாத்திரை வழங்கும் பணிகளில்  தினமும் ஈடுபட்டு வருகிறார். இதனால், வேடந்தாங்கலில் உள்ள துணை சுகாதார  நிலையம் பெரும்பாலான நேரங்களில் மூடியே கிடக்கிறது.  எனவே, வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அவசர மருத்துவ உதவிக்கு மருத்துவம் வசதி ஏற்படுத்தி தரும் வகையில் இந்த கிராமத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தி மருத்துவரை நியமித்து சுற்றுலாப் பயணிகளுக்கும் அப்பகுதி மக்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Vedanthangal panchayat , Vedanthangal Panchayat, Sub Health Center, Public Request
× RELATED வேடந்தாங்கல் ஊராட்சி அரசு பள்ளியில்...