×

வேதகிரீஸ்வரர் கோயில் கிரிவல பாதையில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பயணியர் தங்கும் விடுதி: பக்தர்கள் வேதனை

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான பயணியர் தங்கும் விடுதி முறையான பராமரிப்பு இல்லாததால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுளளதாக பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.  திருக்கழுக்குன்றத்தில் பிரசித்திப்பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் உள்ளது. இக்கோயில், திருஞான சம்மந்தனர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் ஒருங்கே பாடல் பெற்ற ஒரே தலமாகும். 12 ராசிகளில் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு பரிகார தலம் உள்ளதுபோல், கன்னி ராசிக்கு பரிகார தலமாக திருக்கழுக்குன்றம் திருத்தலம் விளங்குகிறது.    

திருவண்ணாமலைக்கு அடுத்து கிரிவலம் செல்வதற்கு திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயில்தான் உகந்தது என்றுணர்ந்த சிவ பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் மாதந்தோறும் பௌர்ணமி நாளில் இங்கு வந்து கிரிவலம் வருகின்றனர். இங்கு வந்து செல்கின்ற வெளி மாவட்டம், வெளி மாநிலத்தவர்கள் தங்க வசதியாக கோயில் நிர்வாகம் சார்பில் கிரிவலப் பாதை அருகில் ஒரு பயணியர் தங்கும் விடுதி  கட்டப்பட்டுள்ளது. அந்த விடுதி கடந்த பல ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாததால் வெளியூர் பக்தர்கள் வந்து தங்க முடியாமலும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமலும் வேறு வழியின்றி அதிக வாடகை கொடுத்து தனியார் விடுதிகளில் தங்க வேண்டிய நிலை உள்ளது.  

விழா காலங்களில் அந்த தனியார் விடுதிகளும் கிடைக்கப்பெறாமல் அதிகாலை வரை அடிவாரத்திலும், பஸ் நிலையத்திலும் காத்துக் கிடந்து பின்னர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டியநிலை உள்ளது. இந்த கோயில் தங்கும் விடுதி அமைந்துள்ள இடம் சற்று ஒதுக்குப் புறமாக உள்ளதால் இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் பாராகவும் பயன்படுத்துகின்றனர். ஒருசிலர் அந்த விடுதியை தவறான விசயங்களுக்கு பயன்படுத்துவதாக உள்ளூர் மக்கம் வேதனை அடைக்கின்றனர்.  

சொல்லப்போனால், கிட்டத்தட்ட பயணியர் விடுதி சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்குகிறது. மேலும், விடுதியை சுற்றி முட்புதர்கள் அடர்ந்து கிடப்பதால் பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்துகளின் புகலிடமாகவும் விளங்குகிறது. இதை முறையாக பராமரிக்க வேண்டிய கோயில் நிர்வாகம் தங்கள் கட்டுப்பாட்டில் இப்படி ஒரு விடுதி இருப்பதையே மறந்து விட்டதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, வெளியூர் பக்தர்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட இந்த விடுதியின் அவல நிலையை போக்கும் விதமாக முறையாக சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சங்கு தீர்த்த குளம் பெயர் வந்தது எப்படி...
மார்க்கெண்டேய முனிவர்  ஒவ்வொரு  சிவத்தலங்களுக்கும் சென்று பாடல் பாடி சிவனை வழிபட்டு வந்த காலத்தில்  திருக்கழுக்குன்றத்தில் மலை மீதுள்ள வேதகிரீஸ்வரரை கண்டு வணங்கி அபிஷேகம்  செய்து வழிபட்டு செல்வதற்காக முன்பொரு காலத்தில் இங்கு வந்துள்ளார். அப்போது,  இங்குள்ள ஒரு குளத்தில் நீராடி விட்டு அந்த குளத்து நீரை எடுத்து சென்று  மலை மீதுள்ள வேதகிரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய பாத்திரமில்லாததால் மனமுறுகி  இறைவனுக்கு அபிஷேகம் செய்ய முடியவில்லையே என்று கண்ணீர் மல்க வாடி  நின்றபோது அபிஷேகம் செய்ய பாத்திரமாய் மார்கண்டேய முனிவருக்காக அந்த  குளத்தில் இருந்து ஒரு சங்கு பிறந்தது.

அதைப் பார்த்த மார்கெண்டேயர்  மகிழ்ச்சியடைந்து அந்த சங்கை கொண்டு  வேதகிரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து  மகிழ்ந்தார். மார்க்கெண்டேய முனிவருக்காக சங்கு பிறந்ததால் அது சங்கு  தீர்த்த குளம் என்று பெயர் பெற்றது. அதன்பிறகு முறையே, 12 ஆண்டுகளுக்கு ஒரு  முறை இந்த குளத்தில் தொடர்ந்து சங்கு பிறந்து வருகிறது என்பதும்,  கும்பகோணம் கும்பமேளாபோல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை  இந்த சங்கு தீர்த்த  குளத்தில் ‘புஷ்கர மேளா’ என்ற விழா நடைபெறுவது வழக்கம் என்பதும்  குறிப்பிடத்தக்கது. இந்த சங்கு தீர்த்த  குளத்தில் குளித்தால் மனநோய், தோல் நோய் உள்ளிட்ட வியாதிகள் தீரும் என்ற  நம்பிக்கை உள்ளதால் உள்ளூர் மற்றும்  வட மாநிலத்தவர்கள் வந்து சங்கு  தீர்த்த குளத்தில் நீராடி பின்னர் வேதகிரீஸ்வரரை வணங்கி செல்வர் என்பது  குறிப்பிடத்தக்கது.


Tags : Vedagireswarar Temple ,Kiriwala , Vedagriswarar Temple, Kiriwala Path, Hostel, Devotees torment
× RELATED திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர்...