×

பெரியபாளையம் அருகே புதர்மண்டி கிடக்கும் ஏரி கால்வாய்: கழிவுநீரும் தேங்குவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கத்திலிருந்து சோழவரம் ஏரிக்கு செல்லும் கால்வாயில் புதர் மண்டி கிடக்கிறது. மேலும் அதில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசுகிறது.
பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணையில் மழைக்காலங்களில் பூண்டி ஏரி நிரம்பினால் அந்த தண்ணீர் திறக்கப்பட்டு தாமரைப்பாக்கம் அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படும்.

பின்னர் மீதமுள்ள உபரி நீர் அணைக்கட்டிலிருந்து வெளியேறி கடலுக்கு செல்லும். மேலும் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் அங்குள்ள கால்வாய் வழியாக சோழவரம் ஏரிக்கு திறக்கப்பட்டு அங்கிருந்து புழல் ஏரிக்கு அனுப்பப்படும். அது சென்னை மக்களுக்கு குடிநீர் தேவைக்காக விநியோகம் செய்யப்படும். ஆனால் கடந்த சில மாதங்களாக தாமரைப்பாக்கத்திலிருந்து சோழவரம் ஏரிக்கு செல்லும் கால்வாயில் செடிகொடிகள் படர்ந்து கால்வாய் முழுவதும் புதர்கள் மண்டி காணப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அந்த கால்வாயில் அக்கம் பக்கம் உள்ள வீடு, கடை, ஓட்டல்களிலிருந்து வெளியேறும் கழிவு நீரும் கால்வாயில் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த கால்வாயில் உள்ள புதர்களை அகற்றி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது, `தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணையில் மழைநீர் தேக்கி வைக்கப்பட்டதால் இங்குள்ள விவசாயிகள் பயன் பெற்றனர். மேலும் சென்னை மக்களின் தாகம் தீர்ப்பதற்காக இந்த அணைக்கட்டில் இருந்து சோழவரம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு அது புழல் ஏரிக்கு அனுப்பப்படும். மேலும் தாமரைப்பாக்கத்திலிருந்து சோழவரம் ஏரிக்கு செல்லும் கால்வாயில் தற்போது செடிகொடிகள் படர்ந்து புதர் மண்டி கால்வாய் தூர்ந்துவிட்டது. தற்போது கழிவு நீரும் தேங்கி நிற்கிறது. எனவே, சோழவரத்திற்கு செல்லும் ஏரிக்கால்வாயை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தூர்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு  தூர்வாரினால் சோழவரம் ஏரிக்கு தண்ணீர் செல்லும்போது கால்வாய் ஓரத்தில் உள்ள விவசாயிகள் நிலத்தடி நீர் உயர்ந்து பயனடைவார்கள்’ என கூறினர்.

Tags : Lake Canal ,Putharmandi ,Periyapalayam , Periyapalayam, Putharmandi Lake Canal, Sewage
× RELATED நாடாளுமன்ற தேர்தலையொட்டி காவல்துறை...