×

பள்ளிப்பட்டு பகுதிகளில் விலையின்றி தேங்காய் மலைபோல் தேக்கம்: தென்னை விவசாயிகள் கவலை

பள்ளிப்பட்டு: பூஜைக்கு மட்டுமின்றி சமையலுக்கும் பயப்படுத்தப்படும் தேங்காய் மகசூல் அதிகரிப்பால் தென்னை விவசாயிகளுக்கு கசப்பை ஏற்படுத்தி வருகிறது. பள்ளிப்பட்டு பகுதியில் பெரும்பாலான தேங்காய் வியாபாரிகள் மரங்களில் தேங்காய் விட்டு விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் அமைந்துள்ள நெடியம், சாமந்தவாடா, ராமச்சந்திராபுரம், கொலத்தூர், சானாகுப்பம், ஐ.வி.பட்டடை, திருமல்ராஜ்பேட்டை, குமாராஜிபேட்டை உள்பட 25க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் விவசாயிகள் கடந்த 50 ஆண்டுகளாக தென்னை சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த பகுதிகளில் ஆற்றுப்படுக்கையில்அமைந்துள்ளதால் தென்னை மரங்கள் சுமார் 25 அடி முதல் 40 அடி உயரம் வரை வளர்ந்து காணப்படுகிறது. ஆண்டு முழுவதும் மகசூல் தரும் தென்னை விவசாயிகள், வியாபாரிகளுக்கு வாழ்வாதாரமாக அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள், வியாபாரிகள் என சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  தேங்காய் வியாபாரத்தை நம்பி குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.  கடந்த காலங்களில் சென்னை, திருப்பதி, சித்தூர், வேலூர் பகுதிகளை சேர்ந்த மொத்த வியாபாரிகள் தென்னை விவசாயிகளை  நேரடியாக அனுகி போட்டா போட்டியுடன் தோப்புக்கு விவசாயிகளிடம் முன்பணம் செலுத்தி தேங்காய் பறித்து லாரிகளில் எடுத்துச் சென்று மொத்தமாகவும், சில்லரையாகவம் விற்பனை செய்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த காலங்களில் ஒரு டன் தேங்காய் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை மொத்த விற்பனை நடைபெற்று வந்தது. இது விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு லாபகரமாக இருந்தது. இருப்பினும் முன் எப்போது இல்லாத அளவிற்கு தேங்காய்  மகசூல் அதிகரித்து விலை கடுமையாக சரிந்துள்ளது. மகசூல் அதிகரிப்பால் தேங்காய் தோப்புக்கு வந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள் குறைந்து விட்டனர். இதனால் பள்ளிப்பட்டு பகுதியில் பல மாதங்களாக தென்னை மரத்திலிருந்து பறித்த தேங்காய் மலைப்போல் குவிக்கப்பட்டுள்ளது.

டன் ஒன்றுக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை மட்டுமே விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இதனால் 25 அடி முதல் 40 அடி உயரமுள்ள தென்னை மரத்தின் மீது ஏறி தேங்காய் பறிக்க மரத்திற்கு 30 வழங்க வேண்டும். உரிக்க  ஒரு காய்க்கு 1.50 வழங்கி அதனை ஒரே இடத்தில் சேமித்து வாகனத்தில் ஏற்றி அனுப்பிவைக்க தேங்காய் ஒன்றுக்கு 4 வரை செலாகிறது. மொத்த விற்பனை செய்யும் வியாபாரிகள் டன் 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை மட்டுமே கேட்பதால் பல மாதங்களாக தோப்பில் தேங்காய் மலைப்போல் தேங்கி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும்
தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் தேங்காய் தென்னை வியாபாரிகளிடமிருந்து கொள்முதல் நிலையங்கள் திறந்துள்ளது. மேலும் சேமிப்பு கிடங்குகள் இருப்பதால் சேமித்து விலை உயர்ந்த பின்னர் விற்பனை செய்து வருகின்றனர். இதேபோல் பள்ளிப்பட்டு பகுதியில் அரசு தேங்காய் கொள்முதல் நிலையம் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் என பள்ளிப்பட்டு பகுதி தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

மரத்திலேயே விடப்படுகிறது
இளநீரை பொறுத்தவரை மொத்த விற்பனை 10 வரை விலை இருந்தாலும், பெரிய உயரமுள்ள மரங்களில் ஏறி பறிக்க இளநீர் ஒன்றுக்கு 5 கேட்கப்படுகிறது. உயரமுள்ள மரங்களில் ஏறி பறிப்பது கடினம் என்பதால் தேங்காய் விற்பனை செய்ய வேண்டி உள்ளது. தேங்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் பெரும்பாலான தென்னை விவசாயிகள் மரங்களில் தேங்காய்களை விட்டு விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.



Tags : Pallipattu , Pallipattu area, stagnant coconut hill, coconut farmers,
× RELATED பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு பேரூராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு