நாளுக்கு நாள் எரிபொருள் தேவை அதிகரிப்பு ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க இலங்கை அரசும் திடீர் திட்டம்: பிரதமர் ரணில் அறிவிப்பு

கொழும்பு: நாளுக்கு நாள் எரிபொருள் தேவை அதிகரித்து வருவதால், ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்க இலங்கை அரசு திட்டமிட்டு உள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு, மருந்து, காஸ், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் எதுவுமே கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்க மணிக்கணக்கில் காத்து கிடக்க வேண்டி உள்ளது. இதனால் மனிதாபிமான அடிப்படையில், இலங்கைக்கு இந்தியா எரிபொருள் உதவி செய்து வருகிறது.

இந்த நாட்டின் தினசரி பெட்ரோல் தேவை 3500 டன்.  கடந்த செவ்வாயன்று முதல் நாள்தோறும் 3000 முதல் 3200 மெட்ரிக் டன் பெட்ரோல் வழங்கப்படுகிறது. இந்தியாவின் கடனுதவியின் கீழ் அனுப்பி வைக்கப்படும் கடைசி கட்ட எரிபொருள்தான் வரும் 16, 22ம் தேதிகளில் வருகிறது. அதன் பிறகு, அடுத்த மாதம் முதல் ஏற்படக் கூடிய எரிபொருள் தேவையை இலங்கை எவ்வாறு சமாளிக்கும் என தெரியவில்லை. இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று கூறுகையில், ‘முன்பு எப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், எரிபொருளுக்காக ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் அதிக எண்ணெய் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். முதலில் மற்ற ஆதாரங்களைத் தேடுகிறோம்.

ஆனால், ரஷ்யாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்குவதற்குத் தயாராக இருக்கிறோம். கடன் இருந்தபோதிலும், சீனாவிடம் இருந்து அதிக நிதி உதவிகளை ஏற்கத் தயாராக இருக்கிறோம். கடுமையான உணவுப் பற்றாக்குறை 2024 வரை தொடரலாம். ரஷ்யாவும் இலங்கைக்கு கோதுமையை வழங்கியுள்ளது,’ என்று கூறினார். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் தடை விதித்துள்ளன. ஆனால், அதையும் மீறி மிகவும் மலிவான விலைக்கு இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது இலங்கையும் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.

காற்றாலை ஒப்பந்தத்தை அதானிக்கு கொடுக்க மோடி அழுத்தமா?

இந்தியாவில் துறைமுகம், அனல் மின்நிலையங்கள், காற்றாலை,  சிமென்ட் என பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் அதானி குழுமம்,  தற்போது அண்டை நாடான இலங்கையில் கால் பதித்துள்ளது. இலங்கையில் காற்றாலை அமைக்க அதானி குழுமம் 500 மெகாவாட்  திட்டத்திற்கான ஒப்பந்தம் போட்டுள்ளது என்று  இலங்கை  முதலீட்டு வாரியத்தின் இயக்குநர் ஜெனரல் ரேணுகா வீரகோன் கூறியிருந்தார். இந்நிலையில், இலங்கை மின்சார வாரியத்தின் தலைவர் பெர்டினான்டோ, இவ்விவகாரம் குறித்து இலங்கை மின்சார வாரியத்தின் நாடாளுமன்றக் குழுவிடம் கூறுகையில், ‘  இலங்கையின் வடகிழக்கு பகுதியில் 500 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு அதானி நிறுவனத்துடன் கடந்தாண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை அதானியிடம் கொடுக்கும்படி அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம், இந்திய பிரதமர் மோடி தெரிவித்ததாக, என்னிடம் அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்தார்,’ என்று கூறினார். இதை கோத்தபய மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை. தவறான தகவல் பரப்பப்படுகிறது’ என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் இந்தியாவிலும், இலங்கையிலும் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில், இலங்கை மின்சார வாரியத்தின் தலைவர் பெர்டினான்டோ, தான் கூறிய கருத்தை தவறுதலாக கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். இவரது திடீர் பல்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: