தமிழகம் முழுவதும் பள்ளி செல்லா மாற்றுத்திறன் குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு: ஆயத்த பயிற்சி மையங்களில் சேர்க்க நடவடிக்கை

சேலம்: தமிழகம் முழுவதும் பள்ளி செல்லா மாற்றுத்திறன் குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, அவர்களை ஆயத்த பயிற்சி மையங்களில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத் திறன் மாணவ, மாணவிகளுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், மழலையர் பள்ளி, பள்ளி ஆயத்தப் பயிற்சி, பள்ளிகள் மற்றும் வீட்டு வழிக் கல்வி மூலமாக பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.  அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்குமான கல்வியை உறுதி செய்யும் பொருட்டு, 6 முதல் 18 வயது வரையுள்ள பள்ளி செல்லாதவர்கள் மற்றும் புலம் பெயர் தொழிலாளர்களின் மாற்றுத் திறன் குழந்தைகளை கண்டறியும் வகையில், ஆண்டுக்கு மூன்று முறை கணக்கெடுப்பு நடத்தப்படும்.

அதன்படி, நடப்பு 2022-23ம் கல்வியாண்டில், மாற்றுத் திறன் குழந்தைகளை குடியிருப்பு வாரியாக சென்று கண்டறிந்து, அவர்களை மீட்டு பள்ளி ஆயத்த பயிற்சி மையங்களில் சேர்க்கப்படவுள்ளனர். பின்னர், 3 மாதங்களுக்கு பயிற்சி அளித்து, மாற்றுத்திறனாளிகளின் இயலாமை நிலையை பொருத்து, அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்படவுள்ளனர். இதன்மூலம் இடைநிற்றலை தடுப்பதுடன், அவர்களின் கல்வியை தொடரச் செய்ய முடியும். மாநிலம் முழுவதும் கணக்கெடுப்பு மற்றும் பதிவேடு புதுப்பித்தல் பணியினை செய்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற குழந்தைகளை கண்டறிவதற்கான, பதிவேடுகளை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். இம்மாற்றுத் திறன் மாணவ, மாணவிகளை கண்டறிந்து, அருகாமையில் உள்ள பயிற்சி மையங்களில் சேர்த்து, 3 மாதங்களுக்கு பயிற்சியளித்து, பின்னர் அவர்கள் பள்ளி அல்லது வீட்டு வழிக்கல்வி மூலம் கல்வி கற்க ஏற்பாடு செய்ய வேண்டும். இக்குழந்தைகளை கண்டறிந்த பின்னர், பள்ளி செல்லா குழந்தைகளுக்கான செல்போன் செயலியில், ஆசிரியர் மற்றும் பயிற்றுநர்களுக்கான, ஐடி மூலம் தரவுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட, மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளின் விவரங்களின் படி, அவர்களை பள்ளிகளில் முறையாக சேர்க்கப்படுவதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்யவும், பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற மாற்றுத் திறன் மாணவ, மாணவிகள், கல்வியினை தடையில்லாமல் தொடர வழிவகை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: