×

மாநிலங்களின் எதிர்ப்பையும் மீறி பிஎஸ்எப் அதிகார வரம்பு விரிவாக்க திட்டம் அமல்: ஒன்றிய அரசு தீவிரம்

புதுடெல்லி: எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை விரிவாக்கம் செய்வதற்கான இறுதி அறிக்கை தயாராக இருப்பதாகவும், விரைவில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திடம் அது சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தான், வங்கதேசம் சர்வதேச எல்லையை ஒட்டிய பஞ்சாப், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 3 மாநிலங்களின் எல்லையை ஒட்டிய பகுதியில் 15 கிலோ மீட்டர் தொலைவிற்கு மாநில அரசின் அனுமதியின்றி எல்லைப் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தவும், சந்தேகிக்கும் நபர்களை கைது செய்யவும் ஏற்கனவே அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இதனிடையே, கடந்தாண்டு அக்டோபரில் இந்த அதிகாரத்தை 50 கிலோ மீட்டர் தூரமாக உயர்த்தி ஒன்றிய அரசு அறிவித்தது.

இதற்கு முன்பு நடந்த டிரோன் தாக்குதலே இதற்கு காரணம் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்தது. ஆனால், இதை எதிர்த்து மேற்கு வங்கம், பஞ்சாப் மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதையும் மீறி, 50 கிலோ மீட்டர் எல்லை அதிகார வரம்பை நீட்டிக்கும் திட்டத்தில் ஒன்றிய அரசு உறுதியாக இருக்கிறது. இந்த பகுதிகளில் பாதுகாப்பு படைகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவற்கான இடங்கள், ஆய்வின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன. வீரர்களுக்கான ஓய்வு அறைகள், சோதனை சாவடிகள், ராணுவ முகாம்கள், தளவாடத் தேவைகள் குறித்த விவரங்கள், இந்த ஆய்வில் சேகரிக்கப்பட்டு உள்ளன. விரைவில் இது உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன், இந்த பகுதிகளில் புதிய தகவல் தொடர்பு, தளவாடங்கள் மற்றும் வீரர்களுக்கான பணியிடங்கள் படிப்படியாக உருவாக்கப்பட உள்ளன.

Tags : Implementation of BSF Jurisdiction Expansion Plan despite State Opposition: Union Government Intensity
× RELATED மகாராஷ்டிராவில் சாதித்தது மகா விகாஸ் அகாடி கூட்டணி