உபி.யில் 2வது நாளாக அதிரடி பிரயாக்ராஜில் வன்முறையை தூண்டியவர் வீடு தரைமட்டம்: புல்டோசர் நடவடிக்கை தொடரும் என யோகி அறிவிப்பு

பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் வன்முறையை தூண்டிய முக்கிய குற்றவாளியின் வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி மூலம் இடித்து தள்ளிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. கலவரக்காரர்கள் மீதான புல்டோசர் நடவடிக்கை தொடரும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். முகமது நபி குறித்து சர்ச்சை கருத்து கூறிய பாஜ தலைவர் நுபுர் சர்மாவை கண்டித்து, கடந்த வெள்ளிக்கிழமை உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்தது. இதில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. உபியில் பிரயாக்ராஜ், சஹரன்பூரில் கல்வீச்சு சம்பவம் நடந்தது. பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இதில் போலீசார் உட்பட பலர் படுகாயமடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்டதாக இதுவரை உபி போலீசார் 304 பேரை கைது செய்துள்ளனர்.

இதில், கலவரத்தை தூண்டியதாக கைதான முக்கிய குற்றவாளிகளின் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணியில் யோகி அரசு களமிறங்கி உள்ளது. சஹரன்பூரில் நேற்று முன்தினம் 2 பேரின் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன. இந்நிலையில், 2வது நாளாக நேற்று பிராயக்ராஜில் புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிராயக்ராஜில் கலவரத்தை தூண்டியதாக கைதான முக்கிய குற்றவாளி ஜாவித் அகமது என்பவரின் வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி மூலம் இடித்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன், சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள், வீட்டிலிருந்து பொருட்களை தெருவில் வீசி எறிந்து, வீட்டை இடித்தனர். ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பதாக ஏற்கனவே பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் ஜாவித் அகமது பதிலளிக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதே சமயம், கலவரக்காரர்கள் மீதான புல்டோசர் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்.

* ரயில் மீது தாக்குதல்

மேற்கு வங்கத்தின் ஹவுராவில் கலவரம் நடந்த நிலையில், நேற்று மேலும் சில பகுதிகளில் போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. நாடியா மாவட்டத்தில் உள்ள பெதுவாதஹாரி ரயில் நிலையம் முன்பாக, சாலை மறியல் செய்த ஒரு கும்பல் திடீரென ரயில் நிலையத்திற்குள் புகுந்து சரமாரியாக கற்களை வீசி தாக்கினர். இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரயில் ஜன்னல் மற்றும் முகப்பு கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. இதனால், லால்கோலா தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பயணிகளுக்கு காயம் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. முன்னதாக, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும் பாஜ தலைவருமான சுவேந்து அதிகாரி, ஹவுராவுக்கு செல்ல முயன்ற போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

* வன்முறையில் ஈடுபட்டவர்களை அடித்து நொறுக்கும் உபி போலீஸ்

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய  கருத்தை கூறிய நுபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி, உபி.யின் சஹரான்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இதில், வன்முறை வெடித்தது. வன்முறையில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்த போலீசார், காவல் நிலையத்தில் சரமாரியாக தாக்கும் வீடியோவை பாஜ எம்எல்ஏ சலாப் மணி திரிபாதி வெளியிட்டுள்ளார். அதில், அடிவாங்கும் நபர்கள் அறைக்குள் அங்கும் இங்கும் ஓடி, விட்டு விடும்படி கெஞ்சுகின்றனர். 2 நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை அவர்,  ‘வன்முறையாளர்களுக்கு திருப்பி அளிக்கப்படும் பரிசு,’ என்ற தலைப்பில் வெளியிட்டு இருக்கிறார். இந்த தாக்குதல் எந்த காவல் நிலையத்தில் நடந்தது என்பதை அவர் வெளியிடவில்லை.

Related Stories: