×

தமிழகம் முழுவதும் நடந்த குறைதீர் முகாமில் ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய 11,067 பேர் விண்ணப்பம்: 10176 பேரின் மனுக்கள் உடனடி தீர்வு

சென்னை: தமிழகம் முழுவதும் நடந்த குறைதீர் முகாமில் ரேஷன் அட்டையில் பெயர் மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பல்வேறு திருத்தத்திற்காக 11,067 பேர் விண்ணப்பத்தினர். இதில் 10176 பேரின் மனுக்கள் உடனடியாக தீர்வு காணப்பட்டதாக உணவு மற்றும் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் மூலம் கீழ் வழங்கப்படும் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் பொருட்டு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் மாதந்தோறும் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, குறைகளைக் கேட்டு தீர்வு காணும் பொருட்டு ஜூன் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் தமிழகம் முழுவதும் அனைத்து மண்டல மற்றும் வட்ட அளவில் நடந்தது. சென்னையில் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இந்த முகாம் நடந்தது. இதில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு/மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை/நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற வருகை தர இயலாத மூத்தகுடிமக்கள் மற்றும் நோய் வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகார சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று நடத்தப்பட்ட மக்கள் குறைதீர் முகாமில் புதிய அட்டை வேண்டி 369 பேர் மனுக்கள் அளித்திருந்தனர். இதில் 106  பேரின் மனுக்கள் தீர்வு செய்யப்பட்டது. 263 பேரின் மனுக்கள் தல விசாரணைக்காக நிலுவையில் உள்ளது. நகல் அட்டை வேண்டி 690 பேர் விண்ணப்பித்தனர். இதில் 578 பேருக்கு தீர்வு காணப்பட்டது. 112 பேரின் மனுக்கள் விசாரணைக்காக நிலுவையில் உள்ளது. முகவரி மாற்றம், பெயர் நீக்கம், பெயர் சேர்த்தலுக்கு 4330 பேர் மனுக்கள் அளித்தனர்.

இதில் 4244 பேரின் மனுக்களுக்கு தீர்வு செய்யப்பட்டது. 86 பேரின் மனுக்கள் விசாரணைக்காக நிலுவையில் உள்ளது. கைப்பேசி எண் மாற்றத்திற்காக 2380 ேபரும், அங்கீகார படிவம் மூலம் பண்டங்கள் பெறுவதற்காக 405 பேர், நியாய விலை கடை மீதான புகார்கள் தொடர்பாக 3 பேர், அட்டை வகை மாற்றம் தொடர்பாக 390 பேரும், குடும்ப தலைவர் மாற்றம், உறுப்பினர் பெயர், பிறந்த தேதியில் திருத்தம் மற்றும் இதர இனங்கள்  தொடர்பாக 2500 பேர் என மொத்தம் 11067 பேர் மனுக்களை அளித்தனர். இதில் 10176 பேரின் மனுக்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளது. 891 பேரின் மனுக்கள் தல விசாரணைக்காக நிலுவையில் உள்ளதாக உணவு மற்றும் உணவு பொருட்கள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

Tags : Kuradir camp ,Tamil Nadu , 11,067 applications for amendment of ration cards in Kuradir camp across Tamil Nadu: 10176 petitions resolved immediately
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...