×

நீர்வளத்துறையில் புதிதாக 272 உதவி பொறியாளர்கள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: தமிழக அரசு சார்பில் டிஎன்பிஎஸ்சிக்கு கடிதம்; சிவில் இன்ஜினியர்களுக்கு அடிக்கிறது ஜாக்பாட்

சென்னை: தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பில் ஏரிகள், அணைகள் புனரமைத்தல், தடுப்பணை, கதவணை கட்டுதல், நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைத்தல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளை கண்காணிக்கும் வகையில், நீர்வளத்துறையில் முதன்மை தலைமை பொறியாளரின் கீழ் 14 தலைமை பொறியாளர்கள், 38 கண்காணிப்பு பொறியாளர்கள், 154 செயற்பொறியாளர்கள், 537 உதவி செயற்பொறியாளர்கள், 1551 உதவி பொறியாளர்கள் பணியிடங்கள் உள்ளன. இவர்களின் கண்காணிப்பின் கீழ் தான் இப்பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில், உதவி பொறியாளர்களுக்கு 326 பேர் உதவி செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டன. இதனால், தற்போது உதவி பொறியாளர்களின் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் பல இடங்களில் தடுப்பணைகள் கட்டுவது, கால்வாய்கள் சீரமைப்பு, ஏரிகள் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை உதவி பொறியாளர்கள் தான் தினமும் நேரில் சென்று ஆய்வு செய்வது வழக்கம். மேலும், ஒவ்வொரு வாரமும் உதவி பொறியாளர்கள் தான், பணிகளின் நிலவரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கையை மண்டல தலைமை பொறியாளர்களுக்கு அனுப்பி வைப்பர்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த உதவி பொறியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, அந்த பணியிடங்களையும் தற்போது பணியில் உள்ள உதவி பொறியாளர்கள் கூடுதல் பொறுப்பாக கவனிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் நீர்வளத்துறையில் 272 உதவி பொறியாளர்கள் காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனாவுக்கு அறிக்கை அளித்திருந்தார். இதற்கு, தமிழக அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. அதன்பேரில், விரைவில் உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சிவில் இன்ஜினியரிங் முடித்து, அரசு வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு ஜாக்பாட்டாக அமையும்.

Tags : DNBSC ,Government of Tamil Nadu ,Jackpot , Action to fill 272 new Assistant Engineer posts in Water Resources: Letter to DNBSC on behalf of Government of Tamil Nadu; Jackpot beats civil engineers
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...