நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மேட்டூர், பவானிசாகர், திருமூர்த்தி உள்பட 64 அணைகளை புனரமைக்க ஒப்புதல்

* நடப்பாண்டில் ரூ.300 கோடியில் 20 அணைகளை புனரமைக்க திட்டம்

* ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சக குழு நேரில் ஆய்வு செய்த பிறகு அனுமதி

சென்னை: அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் மேட்டூர், பவானிசாகர், திருமூர்த்தி உள்பட 64 அணைகளை புனரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மட்டும் ரூ.300 கோடியில் 20 அணைகளை புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் உலக வங்கியின் நிதியுதவியை பெற்று மேல் நீராறு, கீழ்நீராறு, பரம்பிகுளம், தூணக்கடவு, பெருவாரிபள்ளம், திருமூர்த்தி, கீழ்பவானி, வரட்டு பள்ளம், பெரும்பள்ளம், நஞ்சினியாறு, நல்லாதாங்கல் ஓடை, குடகானாறு, சோலையாறு, மேட்டூர், பொன்னையாறு, சித்தாமல்லி, வைகை, சண்முகாநதி, வர்தமாநதி, இருக்கன்குடி, கடனாநதி, ராமநதி, ஆணைக்குட்டம், வடக்கு பச்சையாறு, குண்டாறு, கெலவரப்பள்ளி, சாத்தனூர், மணிமுக்தா, விடூர் அணை, கிருஷ்ணகிரி அணை, வன்னியாறு உட்பட 64 அணைகளை ரூ.1064 கோடியில் புனரமைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ், அணைகளின் கரைகளை பலப்படுத்துவது, மதகுகள், கலிங்கல்கள் மறு கட்டுமானம் செய்வது, ஜெனரேட்டர் வசதி, பாதுகாப்பு அறை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தில் முதற்கட்டமாக ரூ.90 கோடியில் சாத்தனூர் அணை, ரூ.4.56 கோடியில் குடகானாறு அணை, ரூ.4.25 கோடியில் சோலையாறு, ரூ.18.44 கோடியில் கெலவரப்பள்ளி அணை, ரூ.5.74 கோடியில் மேல் நீராறு அணை புனரமைப்பு பணிக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில், சாத்தனூர், குடகானாறு அணைகளில் புனரமைப்பு பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில், இரண்டாவது கட்டமாக ரூ.14.95 கோடியில் மேட்டூர் அணை, ரூ.5 கோடி செலவில் பவானி சாகர் அணை, ரூ.11.55 கோடியில் தூணக்கடவு மற்றும் பெருவாரிபள்ளம் அணை, ரூ.1.12 கோடியில் ராம நதி, ரூ.3.07 கோடி கடனா நதி, ரூ.2.50 கோடியில் குண்டாறு, ரூ.7.65 கோடியில் கிருஷ்ணகிரி அணை, ரூ.7.72 கோடியில் விடூர் அணை, ரூ.27 கோடியில் பரம்பிகுளம், ரூ.12 கோடியில் கீழ் நீராறு, ரூ.3.95 கோடியில் வைகை, ரூ.8.63 கோடியில் ஆழியாறு அணை, ரூ.10.85 கோடியில் திருமூர்த்தி அணை உள்பட 59 அணைகளில் புனரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது வரை 20 அணைகளை ஒன்றிய அரசின், நீர்வளத்துறை அமைச்சக குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து அந்த குழுவினரின் அறிவுரையின் பேரில், அணைகளில் புனரமைப்பு பணி மேற்கொள்வதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக, நடப்பாண்டில் தமிழக அரசு சார்பில் ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நிதியை கொண்டு 20 அணைகள் புனரமைக்கும் பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: