சங்கங்களின் நிர்வாகக் குழு 2 அணியாக செயல்பட்டால் மாவட்டப்பதிவாளர்கள் விசாரணை மேற்கொள்ளலாம்: பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் உத்தரவு

சென்னை: பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஒரு சங்கத்தின் இரண்டு அணியினர் தனித்தனியே சங்க நிர்வாக குழு தேர்தல்களை நடத்தி இரண்டு அணியினரும், தனித்தனியே நிர்வாக குழு படிவம் தாக்கல் செய்தால், அந்த படிவத்தில் இடம் பெற்றுள்ள விவரங்களின் உண்மை தன்மை குறித்து விசாரணை மேற்கொண்டு சரியான படிவத்தினை ஏற்க வேண்டும். போட்டி அணியினர் வெவ்வேறு நிர்வாக குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது குறித்து ஒன்றுக்கும் மேற்பட்ட படிவங்களை தாக்கல் செய்யும் நிகழ்வில் சங்க பதிவாளர்கள் நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.

* சங்கத்தின் நிர்வாக குழு தேர்தல் தொடர்பாக படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டு பரிசீலனையில் இருக்கும் போதே மற்றொரு அணியினரால் தேர்தல் நடத்தப்பட்டதாக தெரிவித்து படிவம் தாக்கல் செய்யப்பட்டால் சங்கப்பதிவாளர் இரண்டு அணியினரிடம் விசாரணை மேற்கொண்டு, தாக்கல் செய்யப்பட்ட இரண்டு படிவங்களில் எந்த படிவம் சட்ட தேவைகளை பூர்த்தி செய்கிறது என்பது குறித்து உறுதி செய்து கொள்ள வேண்டும். சட்டத்தேவைகளை பூர்த்தி செய்யும் படிவத்தை ஏற்க வேண்டும். விசாரணைமுடிவினை ஆணை மூலம் தெரிவிக்க வேண்டும். ஆணையினால் அதிருப்தியுறும் குழுவினரை உரிய உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதன் மூலம் தீர்வு காண அறிவுறுத்த வேண்டும். சங்கப்பதிவாளரால் மேற்கொள்ளப்படும் விசாரணையானது தாக்கல் செய்யப்பட்ட தேதியில் இருந்து 3 மாத காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.

* நீதிமன்றங்களில் சங்க நிர்வாக குழு தேர்தல் தொடர்புடைய படிவம் தாக்கல் செய்வதை தவிர பிற வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், மாவட்ட பதிவாளரிடம் ஆண்டறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டால், அவற்றை ஏற்பதற்கு நீதிமன்றத்தால் மாவட்ட பதிவாளருக்கு தடை உத்தரவுகள், இடைக்கால தடை உத்தரவுகள் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு ஏற்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: