விஜயவாடா ரயில் நிலையத்தில் தாயுடன் விளையாடிய 3 வயது சிறுமியை கடத்திய மர்ம பெண்: சிசிடிவி காட்சியை வைத்து தனிப்படை விசாரணை

திருமலை: விஜயவாடா ரயில் நிலையத்தில் தாயுடன் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுமியை மர்ம பெண் கடத்திச் செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவானது. அதை வைத்து தனிப்படையினர் மர்ம பெண்ணை தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம், என்டிஆர் மாவட்டத்தில் உள்ள விஜயவாடா ரயில் நிலையத்தில் இரவில் தங்கி தினமும் கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வருபவர்கள் மிர்சாவலி. இவரது மனைவி ஹூசைன். தம்பதிக்கு 3 வயதில் ஷபிதா என்ற மகள் உள்ளார். கடந்த 8ம் தேதி ஷபிதா தாயுடன் ரயில் நிலையத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென ஷபிதா காணாமல் போனார். இதனால், அதிர்ச்சியடைந்த ஹூசைன் அக்கம் பக்கம் என பல்வேறு இடங்களில் தேடியும் ஷபிதா கிடைக்கவில்லை.  இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் விஜயவாடா ரயில் நிலைய ஆர்பிஎப் போலீஸ் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், குழந்தை ஷபிதாவை மர்மபெண் ஒருவர் அழைத்து செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

மேலும், குழந்தையை தேடி தாயும் பின்னால் சென்ற காட்சிகளும் இருந்தது. ஆனால், அதற்குள் அந்த பெண் ரயில் நிலையத்தில் இருந்து ஷபிதாவை ஆட்டோவில் ஏற்றி அழைத்து சென்றுள்ளார். தொடர்ந்து, 3 தனிப்படை அமைத்து குழந்தையை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குழந்தையை ரயில் நிலையம் அருகே உள்ள நேரு சிலை  சந்திப்பு பகுதியில் உள்ள மலைக்கு அழைத்து செல்வதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து, குழந்தையை கடத்தி சென்ற மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் தாயுடன் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: