×

மும்பை கடல் பாலத்தில் பறவை உயிரை காப்பாற்ற முயன்ற தொழிலதிபர் பலி

மும்பை: மும்பை கடல் பாலத்தில் பறவை ஒன்று உயிருக்கு போராடிய நிலையில், அதனை காப்பாற்ற முயன்ற தொழிலதிபர் டாக்சி மோதி விபத்தில் பலியானார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பாந்த்ரா - ஒர்லி இடையே கட்டப்பட்டுள்ள கடல் பாலத்தில் காரில் சென்ற சிலர் காரை பாலத்தில் நிறுத்திவிட்டு கடலில் குதித்து தற்கொலை செய்யும் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் பாலத்தில் செல்லும் போது காரை நிறுத்தக்கூடாது என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தெற்கு மும்பையை சேர்ந்த அமர் மனீஷ் என்ற தொழிலதிபர், தனது காரில் மலாடு நோக்கி கடல் பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பறவை ஒன்று காரில் அடிபட்டுவிட்டது. உடனே காரை நிறுத்திய அமர், அவரின் கார் டிரைவர் சியாம் சுந்தர் காமத் ஆகியோர் காரில் இருந்து இறங்கி பறவைக்கு உதவ முயன்றனர். அந்நேரம் பாலத்தில் கார்கள் அனைத்தும் வேகவேகமாக சென்று கொண்டிருந்தன. அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மற்றொரு டாக்சி ஒன்று, இருவர் மீதும் மோதியது. அப்போது இருவரும் பாலத்தில் தூக்கி வீசப்பட்டனர். அவ்வழியாக சென்ற சிலர், இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அமர் இறந்துவிட்டதாக மருத்துவர் கூறினர். டிரைவர் காமத்திற்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கு காரணமான டாக்சி டிரைவர் ரவீந்திர குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து அமரின் தந்தை மனீஷ் கூறுகையில், `எனது மகன் பறவைகள் மற்றும் விலங்குகளுக்காக எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறான். அவன் மீது மோதிய டாக்சி டிரைவர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்’ என்றார். விபத்து ெதாடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.


Tags : Mumbai , Businessman killed while trying to save bird life on Mumbai sea bridge
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...