திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மின் மோட்டார் பழுதால் செயல்படாத கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியினை சீரமைத்து கழிவுநீர் பாசன வாய்க்காலில் கலக்காமல் முறையாக கையாள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூரில் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையானது கலெக்டர் அலுவலகம் பின்புறத்தில் இயங்கி வருகிறது. இங்கு வெளிநோயாளிகளாக தினந்தோறும் 800க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி நாகை மற்றும் மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களிலிருந்தும நோயாளிகள் மேல்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு சிகச்சை பெற்று வருகின்றனர். மேலும் வெளி நோயாளிகள், உள்நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் என நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் நலன் கருதி கடந்த 2006-11 திமுக ஆட்சியின் போது ரூ.100 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த மருத்துவமனையில் இருந்து வெளியேறும் லட்சக்கணக்கான லிட்டர் கழிவுநீர் அனைத்தையும் சுத்திகரிப்பு செய்வதற்கு கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் மற்றும் இதற்கான தொட்டிகள் அமைக்கப்பட்டு இயங்கி வந்தன. இந்நிலையில் இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் மோட்டார் பழுது ஏற்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இந்த மோட்டார் பழுது மட்டுமின்றி எந்த ஒரு பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டன.

இந்நிலையில் மோட்டார் பழுது காரணமாக மருத்துவமனையின் கழிவுநீர் அனைத்தும் சுத்திகரிப்பு செய்யப்படாமல் அப்படியே வெளியேற்றப்பட்டு வருவதுடன் இந்த கழிவுநீர் அனைத்தும் மருத்துவ கல்லூரியை ஒட்டியவாறு செல்லும் பாசன வாய்க்காலில் கலந்து கோடை காலத்தில் கூட ஆறுபோல் நீர் செல்வதால் இந்த கழிவுநீரை குடிக்கும் கால்நடைகள் கூட பாதிப்பிற்குள்ளாகி வருவதுடன் நெல் சாகுபடி வயல்களிலும் இந்த கழிவுநீர் கலந்து செல்லும் நிலை இருந்து வருகிறது. எனவே மோட்டார் பழுதினை சரிசெய்து கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்து பாசன வாய்க்காலில் கலக்காதவாறு மருத்துவமனை உள்ளேயே வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: