×

தென் ஆப்ரிக்காவுக்கு பதிலடி தருமா இளம் இந்தியா?...கட்டாக்கில் இன்று 2வது டி20

கட்டாக்: தொடர் வெற்றிகளுக்கு தடைபோட்டு அதிர்ச்சி தோல்வியை தந்த தென் ஆப்ரிக்காவுக்கு, பதிலடி தரும் முனைப்பில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இன்று 2வது டி20 ஆட்டத்தில் விளையாட உள்ளது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 5 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. டெல்லியில் நடந்த முதல் டி20ல்  தென் ஆப்ரிக்கா  7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்தியா சிறப்பாக விளையாடி 211 ரன் குவித்தாலும், பந்துவீச்சில் சொதப்பியதால் வெற்றி வாய்ப்பை வீணடித்தது. வாண்டெர் டுசன் - மில்லர் ஜோடியின் அதிரடியால் தென் ஆப்ரிக்கா 5 பந்துகள் மிச்சமிருந்த நிலையில் இலக்கை எட்டி அசத்தியது.

தெ.ஆப்ரிக்கா 1-0 என முன்னிலை பெற்றதுடன், தொடர்ச்சியாக 12 டி20 ஆட்டங்களில் வென்றிருந்த இந்தியாவின் வெற்றி நடைக்கும் முற்றுப்புள்ளி  வைத்தது.
ரிஷப் பன்ட் தலைமையிலான இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாகவே இருந்தது. இஷான், ஸ்ரேயாஸ், ஹர்திக் அதிரடியாக விளையாடினர்.
அதேபோல் தெம்பா பவுமா தலைமையில் தெ.ஆப்ரிக்காவும்  அதிரடியாக ரன் குவித்தது. அதுவும் இந்திய பீல்டர்கள் சொதப்பியதை பயன்படுத்தி  வான்டெர் டுசன், டேவிட் மில்லர் இருவரும் இந்திய பந்து  வீச்சை வெளுத்துக் கட்டினர். இரு அணிகளிலும் பெரும்பான்மையான வீரர்கள் சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில்  கலக்கியவர்கள்.

ஆனால் அந்த அனுபவம்  இரு அணியிலும்  பந்துவீச்சில்  பெரிதாக எடுபடவில்லை. இந்திய அணியில் பெரும்பாலும் இளம் வீரர்கள். பேட்டிங்கில் இருந்த வேகம்  பந்துவீசுவதில் இல்லை. அஷ்வினை போல் ரன்னை கட்டுப்படுத்தும், பும்ரா, ஷமி போல் விக்கெட் சாய்க்கும் அனுபவம் இல்லாதது பளிச்சென்று தெரிந்தது.
அதனால் இன்றைய  ஆட்டத்தில் இரு அணிகளிலும் பந்துவீச்சாளர் வரிசையில் மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளது. சீனியர்கள் சாதித்து வந்த தொடர் வெற்றி சாதனையை கை நழுவவிட்ட இளம் வீரர்கள், இன்று கட்டாக்கில் நடக்கும் 2வது ஆட்டத்தில் அதை  சரி செய்ய முயற்சி செய்வார்கள். அதே சமயம்  2வது ஆட்டத்திலும் வென்று  தொடரில் முன்னிலையை தக்க வைக்க தெ.ஆப்ரிக்காவும் தீவிரமாக இருக்கும். அதனால் இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்குமே சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Tags : India ,South Africa ,Cuttack , South Africa, Young India, 2nd T20
× RELATED டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன்...