×

கோவையில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: கோயம்புத்தூர் நகரில் ரூ.230 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை வாயிலாக தரமான மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பினை சிறந்த முறையில் உருவாக்கி, பராமரித்து வருகிறது. அந்த வகையில், ராமநாதபுரம் மற்றும் சுங்கம் சந்திப்பில் ரூ.230 கோடி செலவில் 3.15 கி.மீ. நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள 4 வழித்தட மேம்பாலத்தை மக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் காணொளி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.

இப்பாலம் திறக்கப்படுவதால், ராமநாதபுரம், ஓலம்பஸ் மற்றும் சுங்கம் ஆகிய மூன்று முக்கிய சந்திப்புகள் மற்றும் அல்வேனியா பள்ளி சந்திப்பு, சவுரிபாளையம் சந்திப்பு, புளியகுளம் பிரிவு சாலை சந்திப்பு, வானொலி நிலையம் சந்திப்பு, பந்தய சாலை சந்திப்பு, வாலாங்குளம் சாலை சந்திப்பு ஆகிய ஆறு இதர சந்திப்புகளிடையே உள்ள போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, சிக்னல் மற்றும் சந்திப்புகளில் வாகனங்கள் நின்று செல்வதால் ஏற்படும் காலதாமதமும் தவிர்க்கப்படும். அத்துடன் விபத்துக்களை தவிர்ப்பதற்கும் இது உதவும். மேலும், சிங்காநல்லூரிலிருந்து அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், நகர்மண்டபம், உக்கடம் ஆகிய பகுதிகளுக்கு மக்களால் போக்குவரத்து நெரிசலின்றி எளிதாக செல்ல முடியும். இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெறுவர்.
மேலும், கோயம்புத்தூர் நகரில், கவுண்டம்பாளையம் சந்திப்பில் ரூ.60 கோடி செலவில் 1.17 கி.மீ. நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள 4 வழித்தட மேம்பாலத்தை மக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.

இப்பாலம் திறக்கப்படுவதால், கவுண்டம்பாளையம் மற்றும் நல்லாம்பாளையம் சாலை சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும். இதன்மூலம் கோவையிலிருந்து மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி, கூடலூர் மற்றும் மைசூர் செல்லும் வாகனங்கள் எளிதாக செல்ல முடியும்.  இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் இறையன்பு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் தீரஜ் குமார், தலைமைப் பொறியாளர் (தேசிய நெடுஞ்சாலை) பாலமுருகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Goa ,CM K. Stalin , Coimbatore, flyover, Chief Minister MK Stalin,
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்;...