×

ரவுடியை ரகசியமாக விடுவித்த விவகாரம் சிறை அதிகாரிகள், வார்டன்கள் 20 பேரிடம் டி.ஐ.ஜி. விசாரணை: தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது

சேலம்: சேலம் மத்திய சிறையில் ரவுடியை ரகசியமாக விடுவித்த விவகாரம் தொடர்பாக சிறை அதிகாரிகள், வார்டன்கள் மற்றும் கைதிகள் என 20 பேரிடம் டிஐஜி விசாரணை நடத்தினார். காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சியை சேர்ந்த ரவுடி வசந்த் (27). சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவருக்கு ஜாமீன் கிடைத்தது. மற்றொரு வழக்கில் அவரை கைது செய்ய காஞ்சிபுரம் மாவட்ட தனிப்படை போலீசார், சிறை வாசலில் காத்திருந்தபோது, கேன்டீன் ஷட்டரை திறந்து ரகசியமாக வெளியே அனுப்பி விட்டனர். விசாரணையில் பணத்தை பெற்றுக்கொண்டு அவரை கேன்டீன் வழியே ரகசியமாக விடுவித்தது தெரியவந்தது.

இவ்விவகாரத்தில் மத்திய சிறை சீப்ஹெட் வார்டன் ரமேஷ்குமார், ஹெட்வார்டன் பூபதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் விசாரணையில் ‘‘மற்றொரு வழக்கில் ரவுடியை கைது செய்ய போலீசார் தயாராக இருப்பதை ரவுடியின் ஆதரவாளர் அறிந்து, ஒரு நாளைக்கு முன்னதாக அந்த ஆதரவாளர் சிறை அதிகாரிகளை சந்தித்து பேசியதையடுத்து கேன்டீன் ஷட்டரை திறந்து வெளியே விடும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்காக ரூ.20 ஆயிரம் கைமாறியுள்ளது,’’ என்ற தகவல் வெளியானது.

இதுபற்றி விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க கோவை சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரத்திற்கு உத்தரவிடப்பட்டது. அவர் நேற்று முன்தினம் இரவு சேலம் வந்தார். சேலம் மத்திய சிறைக்கு நேற்று காலை சென்று பணியில் இருந்த வார்டன்கள், கைதிகளை விடுவிக்கும் பொறுப்பில் இருந்த வார்டன்கள், கைதி வசந்த் அடைக்கப்பட்டிருந்த அறையில் உள்ள இதர கைதிகள் என 20 பேரிடம் தனித்தனியே விசாரணை நடத்தினார்.

மேலும், சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், ஜெயிலர் மதிவாணன் ஆகியோரிடமும் டிஐஜி தனியாக விசாரித்தார். இவ்விசாரணை மதியம் 1.30 மணி வரை நடந்தது. பின்னர் அவர், கோவைக்கு புறப்பட்டுச் சென்றார். ஓரிருநாளில் விசாரணை அறிக்கையை சிறைத்துறை தலைவருக்கு வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து பின்னணியில் உள்ள சிறை அதிகாரிகள், வார்டன்கள் மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை பாயும் என கூறப்படுகிறது.

Tags : Rowdy ,DIG , Rowdy, Prison Officers, Wardens, DIG. Trial,
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...