தனியார் துறைகளில் ஆகஸ்ட் இறுதிக்குள் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவோம்: அமைச்சர் சி.வி.கணேசன் உறுதி

கும்பகோணம்:தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

அப்போது அமைச்சர் கணேசன் அளித்த பேட்டி: தனியார் துறைகளில் வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுத்தருவோம் என்ற நம்பிக்கையுள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 60 மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று, அதன் மூலம் 87 ஆயிரத்து 280 இளைஞர்கள் பணியாணை பெற்றுள்ளனர். இன்று (நேற்று) கும்பகோணத்தில் நடைபெறுவது 61 வது முகாம். இதில் 3 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது.

தொழிற்சாலைகளிலும் பல்லாயிரம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. தொடர்ந்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களை மாநில மற்றும் ஒன்றிய அரசின் பல்வேறு விதமான பணிகள், வங்கி தேர்வுகள் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு அதன் மூலமும் பல ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு பணி கிடைக்கும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: