×

தாய்லாந்து விமானத்தில் திடீர் கோளாறு விமானியின் சாதுர்யத்தால் 164 பயணிகள் உயிர் தப்பினர்

சென்னை:  சென்னையில் இருந்து தாய்லாந்துக்கு செல்லும் தாய் ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் ஓடியபோது திடீரென இயந்திரக்கோளாறு ஏற்பட்டது. விமானியின் சாதுர்யத்தால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, 164 பேர் உயிர் தப்பினர். பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் விமானம் வழக்கமாக நள்ளிரவு 12 மணிக்கு சென்னைக்கு வந்தடையும்.

பின்னர் அந்த விமானம் மீண்டும் அதிகாலை 1.10 மணிக்கு பாங்காக் புறப்பட்டு செல்லும். இந்த விமானம் நேற்று நள்ளிரவு வழக்கத்தை விட முன்னதாக 11.30 மணிக்கே சென்னைக்கு வந்தடைந்தது. அதில் பாங்காக் செல்ல வேண்டிய பயணிகள் 158 பேர், விமான ஊழியர்கள் 8 பேர் இருந்தனர். 164 பேருடன் விமானம் ஓட தொடங்கியபோது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டிருந்ததை விமானி கண்டுபிடித்தார். உடனே விமானத்தை நிறுத்தி விட்டு, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் கொடுத்தார்.

இதையடுத்து இழுவை வாகனம் மூலம் விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. பயணிகள் கீழே இறக்கப்பட்டு ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.  விமானம் அதிகாலை 5 மணிக்கு புறப்படும் என்று அறிவித்தனர். அதன் பின்னர் 8 மணிக்கு புறப்படும் என்று அறிவித்தனர். ஆனாலும் இயந்திர கோளாறு சரி செய்ய முடியாததால் விமானம் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 158 பயணிகளும் தவித்தனர்.

தாய்லாந்தில் இருந்து நேற்று இரவு உதிரிபாகங்கள் கொண்டுவரப்பட்டு சரி செய்யப்பட்ட பின்னர் இன்று அதிகாலை புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் ஓட்டல்களில் பயணிகள் தங்க வைக்கப்பட்டனர். இயந்திர கோளாறை தகுந்த நேரத்தில் விமானி கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 164 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Tags : Thailand , Thailand flight, sudden crash, pilot's ingenuity,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...