×

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் குறித்த ஆலோசனை கூட்டம் மு.க.ஸ்டாலினுக்கு மம்தா அழைப்பு: மேலும் 21 எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் கடிதம்

கொல்கத்தா: ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 22 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதி உள்ளார். இதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் வரும் 15ம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிகிறது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் அனைத்து மாநில எம்பி, எம்எல்ஏக்கள் வாக்களிப்பார்கள். தேர்தலில் பதிவான வாக்குகள் அடுத்த மாதம் 21ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதைத் தொடர்ந்து, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தரப்பில் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைகள் தீவிரமடைந்து உள்ளன.

நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில் பாஜ 22 எம்பிக்களைப் பெற்றதன் மூலம் அக்கட்சியின் கை ஓங்கி உள்ளது. மொத்தம் 4,809 எம்பி, எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களின் வாக்கு மதிப்பு 10.86 லட்சமாகும். இதில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 48 சதவீத வாக்கு பலத்துடன் உள்ளது. இதனால், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு தந்தாலே போதும், பாஜ நிறுத்தும் வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அதே சமயம், பாஜவுக்கு நெருக்கடி தர, எதிர்க்கட்சிகள் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டியது அவசியம். காங்கிரசை பொறுத்த வரையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை பொது வேட்பாளராக நிறுத்த விரும்புகிறது.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தும் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் களமிறங்கி உள்ளார். ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை தேர்வு செய்ய ஆலோசனை நடத்த வருமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 22 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்களுக்கு அவர் நேற்று கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தற்போதைய சூழலில் நாட்டில் உள்ள அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைந்து நம்மை ஆட்டிப்படைக்கும் பிரிவினைவாத சக்தியை எதிர்க்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றிய அமைப்புகளால் வேண்டுமென்றே குறிவைக்கப்படுகிறார்கள். சர்வதேச அளவில் நாட்டின் மதிப்பு இழிவுபடுத்தப்படுகிறது. கசப்பான கருத்து வேறுபாடுகள் உருவாக்கப்படுகின்றன. எனவே, நமது எதிர்ப்பை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது.

ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், நமது ஜனநாயகத்தின் பாதுகாவலர் யார் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். நமது ஜனநாயகம் இக்கட்டான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் எதிர் குரல்கள் ஒருசேர சங்கமிப்பது காலத்தின் கட்டாயமாகும். எனவே, வரும் 15ம் தேதி மாலை 3 மணிக்கு டெல்லி அரசியல் சட்ட கிளப்பில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சோனியாவுடன் சரத் பவார் இன்று சந்திப்பு
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்  பவாரை நிறுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரும்புகிறார்.  இது தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஏற்கனவே இவரை சந்தித்து பேசி இருக்கிறார். இந்நிலையில், புனேவில் சரத் பவார் நேற்று அளித்த பேட்டியில், ‘‘காங்கிரசுடன் இணைந்து ஜனாதிபதி வேட்பாளரை  முடிவு செய்வது தொடர்பாக இதுவரையில் எவ்வித ஆலோசனையும் நடத்தவில்லை. இருப்பினும், நாளை (இன்று) டெல்லி சென்று சோனியா காந்தியை சந்திக்க இருக்கிறேன். அப்போது, ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆலோசிக்க உள்ளேன்,’’ என்றார்.

சோனியாவுக்கும் அழைப்பு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராய் விஜயன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோருக்கும் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் மம்தா கடிதம் அனுப்பி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

Tags : Presidential Election ,K. Mamta ,Stalin , Mamata Banerjee calls for presidential election, common candidate, consultative meeting, MK Stalin
× RELATED தேர்தலில் தோற்றால் ரத்தகளறி ஏற்படும்:...