சாதி குறித்து சர்ச்சை கருத்து கூறிய யுவராஜ் சிங், முன்முன் தத்தா யுவிகா சவுத்ரிக்கு சிக்கல்: மாநில குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றம்

ஹிசார்: சாதி குறித்து சர்ச்சை கருத்து கூறிய யுவராஜ் சிங், முன்முன் தத்தா, யுவிகா சவுத்ரி தொடர்பான வழக்குகள் மாநில குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதால், குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கடந்த 2020ம் ஆண்டு ஜூனில் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில், மற்றொரு கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலின் சாதி குறித்து அவதூறாக பேசியது பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

இதையடுத்து யுவராஜ் சிங் தனது டுவிட்டர் பகிரங்க மன்னிப்பு கோரினார். இருந்தும் அரியானாவில் தலித் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் கீழ், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் யுவராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் முதல் தகவல் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல், குறிப்பிட்ட சாதியினர் குறித்து நடிகைகள் முன்முன் தத்தா மற்றும் யுவிகா சவுத்ரி ஆகியோரும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தனர்.

இவர்கள் இருவர் மீதும் எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டன. மேற்கண்ட மூன்று பேர் மீதும் சமூக ஆர்வலர் ரஜத் கல்சன் என்பவரே புகார் அளித்திருந்தார். மூன்று வழக்குகளையும் நகர காவல்துறை  விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், மேற்கண்ட வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருக்கும் நிலையில், மாநில குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதனால், இவர்கள் மீதான வழக்கிற்கு தனி முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

மேலும் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வலுவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாநில குற்றப்பிரவு டிஎஸ்பி வினோத் சங்கர் கூறுகையில், ‘நகர போலீசார் வழக்கின் விசாரணையை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது யுவராஜ் சிங், முன்முன் தத்தா, யுவிகா சவுத்ரி தொடர்பான மூன்று வழக்குகளும் மாநில குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆவணங்களை நகர காவல்துறை, மாநில குற்றப்பிரிவிடம் ஒப்படைத்துள்ளது’ என்றார்.

Related Stories: