×

ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல்: சொப்னா பரபரப்பு பேட்டி

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஜாமீனில் உள்ள சொப்னா நாளுக்கு நாள் பல்வேறு அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டு வருகிறார். முதல்வர் பினராயி விஜயன் சூட்கேசில் துபாய்க்கு பணத்தை கடத்தினார் என்றும், அமீரக துணைத் தூதரின் வீட்டிலிருந்து பிரியாணி பாத்திரங்களில் பினராயி விஜயனின் வீட்டுக்கு தங்கம் கடத்தப்பட்டது என்றும் அவர் கூறியதால், பினராயி விஜயன் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சியினர் கேரளா முழுவதும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பினராயி விஜயனின் சார்பாக ஷாஜ் கிரண் என்பவர் தன்னை மிரட்டியதாகவும், அந்த ஆடியோவை வெளியிடுவதாக கூறிய சொப்னா, நேற்று அந்த ஆடியோவை வெளியிட்டார். அதில், முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சிபிஎம் மாநில செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் ஆகியோர் பிலீவர்ஸ் சர்ச் என்ற கிறிஸ்தவ அமைப்பின் மூலம் அமெரிக்காவுக்கு பலமுறை பணத்தை கடத்தியதாக ஷாஜ் கிரண் பேசும் தகவல் இடம்பெற்றிருந்தது. அப்போது சொப்னா கூறியது: தன்னை பினராயி விஜயனின் பார்ட்னர் என்று ஷாஜ் கிரண் என்னிடம் கூறினார்.

அவர் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்றும், ரகசிய வாக்குமூலத்தை வாபஸ் பெறாவிட்டால் என்னுடைய உயிருக்கு மட்டுமில்லாமல் என்னுடைய மகனின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்றும் அவர் கூறினார். மேலும், என்னுடைய ஆபாச வீடியோ இருப்பதாகவும் அதை வெளியிடப் போவதாகவும் மிரட்டினார். குளியலறையிலோ, படுக்கை அறையிலோ, உடை மாற்றும் அறையிலோ ரகசிய கேமராவை வைத்து படம் பிடித்திருந்தால் என்னால் எதுவும் செய்ய முடியாது.

அந்த ஆபாச வீடியோ உங்களுக்கு கிடைத்தால் அனைவரும் பார்த்து அது உண்மை தானா என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். ஆபாச வீடியோ இருப்பதாக கூறினால் பெண்களை எளிதில் மிரட்டி விடலாம் என்பது அவருக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

லஞ்ச ஒழிப்பு ஏடிஜிபி மாற்றம்
ஷாஜ் கிரண் தன்னுடன் பேசிக்கொண்டிருந்தபோது லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரான ஏடிஜிபி அஜித்குமார் வாட்ஸ்அப் காலில் ஷாஜ் கிரணிடம் பேசியதாக சொப்னா கூறியிருந்தார். இதுகுறித்து உளவுத்துறை நடத்திய விசாரணையில் ஷாஜ் கிரணுடன் லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபி அஜித்குமார் பேசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை இடமாற்றம் செய்ய முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். இதன்படி நேற்று இரவோடு இரவாக அஜித்குமார் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் பதவியிலிருந்து மாற்றப்பட்டார்.

பீலீவர்ஸ் சர்ச் அறிக்கை
இந்நிலையில் பிலீவர்ஸ் சர்ச் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பது: பத்திரிகையாளர் என்ற முறையில் 2014ம் ஆண்டு முதல் ஷாஜ் கிரண் பிலீவர்ஸ் சர்ச் அமைப்புடன் தொடர்பில் இருந்தார். அதன்பின் சுமார் 6 மாதம் அவரது மனைவி எங்களது அமைப்பில் பணிபுரிந்தார். பின்னர் அவரை பணியிலிருந்து நீக்கி விட்டோம். இதுதவிர ஷாஜ் கிரணுடன் எங்களது அமைப்புக்கு எந்த தொடர்பும் கிடையாது. அவர் கூறியுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விரைவில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sobna Stir , Threatening to release pornographic video: Sopna sensational interview
× RELATED பினராய் விஜயன் சூட்கேசில் துபாய்க்கு...