×

கட்டாக்கில் நாளை 2வது டி.20 போட்டி: தென்ஆப்ரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?

கட்டாக்: தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெல்லியில் நடந்த முதல் போட்டியில் தென்ஆப்ரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியாவின் தொடர் வெற்றிக்கு (12 வெற்றி) தடை போட்டது. இந்நிலையில் 2வது போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நாளை நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் நேற்று அங்கு வந்தடைந்தனர்.

இன்று பயிற்சியில் ஈடுபட்டனர். முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியில் இந்தியா களம் இறங்குகிறது. டெல்லியில் 211 ரன் குவித்த போதிலும் மோசமான பந்துவீச்சால் தோல்வி அடைந்தது. ஸ்ரேயாஸ் அய்யர் முக்கிய கட்டத்தில் டுசெனின் கேட்சை தவறவிட்டதும் பின்னடைவாக அமைந்தது. நாளை அணியில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது. ஹர்சல்பட்டேலுக்கு பதிலாக உம்ரான் மாலிக் அல்லது அர்ஷ்தீப்சிங் இடம்பெறலாம்.

அக்சர்பட்டேலுக்கு பதிலாக ரவி பிஷ்னாய் சேர்க்கப்படலாம். மறுபுறம் தென்ஆப்ரிக்கா முதல் போட்டியில் பெற்ற வெற்றியை தொடரும் முனைப்பில் உள்ளது. பேட்டிங்கில் டேவிட் மி(கி)ல்லர் ஐபிஎல் பார்மில் தொடர்ந்து மிரட்டுகிறார். பந்துவீச்சும் வலுவாக உள்ளது. இரு அணிகளும் நாளை 17வது முறையாக டி.20 போட்டியில் மோத உள்ளன. இதுவரை நேருக்கு நேர் சந்தித்த 16 போட்டியில் 9ல் இந்தியாவும், 7ல் தென்ஆப்ரிக்காவும் வென்றுள்ளன.

சொந்த மண்ணில் இந்தியா 7 போட்டிகளில் மோதியதில் இந்தியா ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. 4ல் தென்ஆப்ரிக்கா வென்றுள்ளது. 2 போட்டி கைவிடப்பட்டுள்ளது. சுழலுக்கு கைகொடுக்கும் பிட்ச் கட்டாக்கில் நாளை வெப்ப நிலை 28 டிகிரி செல்சியசாக இருக்கும். மழை வர 2 சதவீதமே வாய்ப்பு உள்ளது. அப்படி மழை வந்தாலும் மைதானத்தை மூடுவதற்காக லண்டனில் இருந்து மிதவை உறை வாங்கப்பட்டுள்ளது. இதனால் போட்டிக்கு பாதிப்பு இருக்காது.

பேட்டிங்கிற்கு ஏற்றவகையில் பிட்ச் தயாரிக்கப்பட்டாலும் சற்று மெதுவாக இருப்பதால் சுழலுக்கு கைகொடுக்கும். இதனால் டெல்லியை போல ரன் குவிக்க முடியாது. அதிக ஈரப்பதம் 2வது பீல்டிங் செய்யும் அணியின் பந்துவீச்சாளர்களை சற்று கவலையடையச் செய்யும். இதனால் டாஸ் வெல்லும் அணி பீல்டிங்கை தேர்வு செய்யும் வாய்ப்பு அதிகம்.

கட்டாக்கில் இதுவரை...
ஒடிசாவின் கடற்கரை நகரான கட்டாக் பாராபதி ஸ்டேடியத்தில் 45 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை காணலாம். 4 ஆண்டுக்கு பின் இங்கு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதால் டிக்கெட் அனைத்து விற்று தீர்ந்துவிட்டன. கடைசியாக 2019ம் ஆண்டு வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான நடந்த ஒரு நாள் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கு இதுவரை 2 டி.20 போட்டிகள் நடந்துள்ளன. 2015ல் தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றுள்ளது. 2017ல் இலங்கையுடன் 93ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது.

ஜில் பீர் அதிகம் குடியுங்கள்...
இந்தியாவில் கோடைவெயில் பல மாநிலங்களில் கடுமையாக உள்ளது. இதனால் தென்ஆப்ரிக்க வீரர்கள் தவித்து வருகின்றனர். இதனிடையே வெயிலில் இருந்து தப்பிக்க தனது அணி வீரர்களுக்கு தென்ஆப்ரிக்க கேப்டன் பவுமா டிப்ஸ் கொடுத்துள்ளார். அதிக வெப்பத்தை சமாளிக்க நிறைய குளிர்ந்த பீர் மற்றும் தண்ணீரை குடித்து முடிந்த வரை புத்துணர்ச்சியுடன் இருங்கள் என தனது குழுவினருக்கு அறிவுறுத்தி உள்ளார்.

Tags : Cattack ,India ,South Africa , 2nd T20 match in Cuttack tomorrow: Will India retaliate against South Africa?
× RELATED தென்னாப்பிரிக்காவில் பாலத்தை...