×

சென்னையில் இருந்து தாய்லாந்து சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு: 164 பேர் உயிர் தப்பினர்

மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து தாய்லாந்துக்கு சென்ற தாய் ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் ஓடியபோது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. விமானியின் துரித நடவடிக்கையால், 158 பயணிகள் உட்பட 164 பேர் உயிர் தப்பினர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் எர்லைன்ஸ் விமானம் வழக்கமாக நள்ளிரவு 12 மணிக்கு சென்னைக்கு வந்தடையும். பின்னர் அந்த விமானம் மீண்டும் அதிகாலை 1.10 மணிக்கு பாங்கா புறப்பட்டு செல்லும்.

அதுபோன்று இன்று அதிகாலை 1.10 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த விமானம் வழக்கத்தை விட 30 நிமிடம் முன்னதாக நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு சென்னைக்கு வந்தடைந்தது. அதில் பாங்கா செல்ல வேண்டிய பயணிகள் 158 பேர் இருந்தனர். அனைவரும் இரவு 10.30 மணிக்கு முன்னதாகவே விமான நிலையத்துக்கு வந்தனர். போர்டிங் பாஸ் வாங்கி கொண்டு, அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏறினர்.

பயணிகள் 158 பேர் மற்றும் விமான ஊழியர்கள் 8 பேர் இருந்தனர். 164 பேருடன் விமானம் புறப்பட தயாரானது. விமானத்தின் கதவுகள் மூடப்பட்டு, ஓடு பாதையில் விமானம் ஓட தொடங்கியபோது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டிருந்ததை விமானி கண்டுபிடித்தார். உடனே விமானத்தை நிறுத்தி விட்டு, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் அவசரமாக தகவல் கொடுத்தார். இதையடுத்து இழுவை வாகனம் மூலம் விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

பயணிகள் கீழே இறக்கப்பட்டு ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தை பழுது பார்க்கும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டனர். விமானம் அதிகாலை 5 மணிக்கு புறப்படும் என்று அறிவித்தனர். அதன் பின்னர் 8 மணிக்கு புறப்படும் என்று அறிவித்தனர். ஆனாலும் இயந்திர கோளாறு சரி செய்ய முடியாததால் விமானம் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 158 பயணிகளும் தவித்தனர்.

பின்னர் திடீரென விமானம் மதியத்திற்கு மேல் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஓட்டல்களில் பயணிகள் தங்க வைக்கப்பட்டனர். இயந்திர கோளாறை தகுந்த நேரத்தில் விமானி கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 164 பேரும் உயிர் தப்பினர்.   


Tags : Chennai ,Thailand , Engine malfunction on flight from Chennai to Thailand: 164 survivors
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...