×

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலையில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ச்சி-கழிவறை, குடிநீர் வசதி ஏற்படுத்த கோரிக்கை

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலையில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கழிவறை, குடிநீர் வசதியை ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலை சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டு 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டு 14 கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக செயல்படுகிறது. மலைவாழ் மக்களின் வாழ்வாதாரமாகவும், முக்கிய தொழிலாகவும் விவசாயம் உள்ளது. இங்கு படகுத்துறை, சிறுவர் பூங்கா, இயற்கை பூங்கா, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி, மூலிகை பண்ணை உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர். மேலும் தனியார் பொழுதுபோக்கு கூடங்களும், தங்கும் விடுதிகளும் உள்ளன.

தற்போது கோடைகாலம் என்பதாலும் பள்ளி விடுமுறை என்பதாலும் பல்வேறு பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து படகில் சவாரி செய்து செல்பி எடுத்து மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். இதுமட்டுமின்றி இயற்கை பூங்காவில் செயற்கை நீரூற்று, மீன் தொட்டி, மலர் செடிகள், பூங்காக்கள் போன்றவைகளில் குழந்தைகளை ஊஞ்சலில் அமரவைத்து மகிழ்ந்து வருகின்றனர். ஊட்டி, கொடைக்கானல், கர்நாடகம் போன்ற பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட சாக்லேட்டுகள், பழ வகைகளை வாங்கி குழந்தைகளுக்கும் கொடுத்து மகிழ்கின்ற
னர்.

மேலும் அத்தனூர் பஸ் நிலையம், சிறுவர் பூங்கா, இயற்கை பூங்கா ஆகிய 3 இடங்களில் மட்டுமே கழிவறை வசதிகள் உள்ளது. ஆனால், சுகாதாரமின்றி தண்ணீர் வசதியின்றி உள்ளது. இதனால்,  சுற்றுலா பயணிகள் போதுமான கழிவறை வசதியின்றி கடும் அவதிக்குள்ளாகின்றனர். ஆங்காங்கே குடிநீர் வசதியின்றியும் இருந்து வருவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவறை வசதி மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Yelagiri Hills ,Jolarpet , Jolarpet: Tourists enjoy a boat ride with their family on the Yelagiri Hills next to Jolarpet. Toilet, drinking water
× RELATED மண்டைய உடைக்குறாங்க… மரியாதை கொடுக்க...