வேப்பனஹள்ளி அருகே ஊருக்குள் புகுந்து கன்றுக்குட்டியை தாக்கி கொன்ற ஒற்றை யானை-கிராம மக்கள் பீதி

வேப்பனஹள்ளி : வேப்பனஹள்ளி அருகே, ஒற்றை யானை தாக்கி கன்றுக்குட்டி பலியான சம்பவம் கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. மூன்றே மாதத்தில் ஒரே குடும்பத்தில் மீண்டும் நிகழ்ந்த உயிர்பலியால் கிராம மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே சிகரலப்பள்ளி, எப்ரி, மணவாரனப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில், 11 யானைகள் 3 பிரிவுகளாக பிரிந்து சுற்றி வருகின்றன. இந்த யானைகள் கிராமங்களுக்குள் இரவு நேரங்களில் புகுந்து, அங்குள்ள பயிர்களை நாசம் செய்து வருவது வாடிக்கையாக உள்ளது. கர்நாடக மாநில வனத்தையொட்டி, பெரும்பாலான இடங்களில் மின் வேலி அமைக்கப்பட்டுள்ளதால், யானைகள் அங்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, இதனால், இப்பகுதியிலேயே தங்கியுள்ள யானைகளை, வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சிகரலப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானை, நாகராஜ் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்தது. அப்போது, அங்குள்ள கொட்டகையில் கட்டி வைத்திருந்த கன்றுக்குட்டியை தாக்கியதில், அந்த கன்றுக்குட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து, அருகில் உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒற்றை யானை, பயிர்களை நாசம் செய்துவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.

 நேற்று காலை அந்த வழியாக சென்ற கிராம மக்கள், ஒற்றை யானை வந்து சென்றதற்கான கால் தடத்தை கண்டு திடுக்கிட்டனர். அப்போது, நாகராஜ் தோட்டத்திற்குள் கன்றுக்குட்டி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதேபோல், கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை, நாகராஜ் குடும்பத்தைச் சேர்ந்த வாலிபரை மிதித்து கொன்றதாக கிராம மக்கள் பீதியுடன் தெரிவித்தனர். ஊருக்குள் மிக அருகாமையில், இரவு நேரங்களில் யானைகள் சுற்றி சுற்றி வருவதால், தூக்கத்தை இழந்து தவிப்பதாகவும், யானை பயத்தால் தோட்டத்திற்கு சென்று மாங்காய்களை பறிக்க வழியின்றி அப்படியே விட்டுள்ளதால் மரத்திலேயே பழுத்து அழுகி வருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, யானைகளை விரைந்து விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: