நீர்வரத்து 7,500 கனஅடியாக சரிவு ஒகேனக்கல்லில் குளிக்க, பரிசல் இயக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 7500 கனஅடியாக சரிந்துள்ள நிலையில், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், பெய்த மழையின் காரணமாக, ஒகேனக்கலில் கடந்த 7ம் தேதி நீர்வரத்து விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்நிலையில், மழை தணிந்துள்ளதால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து சரியத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 9,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 7,500கன அடியாக சரிந்தது. இதனை தொடர்ந்து, அருவிகளில் குளிக்கவும், காவிரியில் பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கி கொள்ளப்பட்டது. நேற்று காலை 10மணி முதல் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

இதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 9,772 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை  7,605 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 12,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரத்தை காட்டிலும், தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 115.22அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 114.95அடியாக சரிந்தது. நீர் இருப்பு 85.64டிஎம்சியாக உள்ளது. தென்மேற்கு பருவமழை கை கொடுத்தால் ஜூலை இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில், மேட்டூர் அணை முழுமையாக நிரம்பும் வாய்ப்புள்ளது.

கடந்த ஆண்டு சிறப்பான நீர் மேலாண்மையை கையாண்டதால், மேட்டூர் அணை தொடர்ந்து இன்றுவரை 229வது நாளாக, 100 அடிக்கும் கீழ் குறையாமல் உள்ளது. நடப்பு ஆண்டிலும் டெல்டா பாசனத்திற்கு தேவைக்கேற்ப காவிரி நீரை பயன்படுத்தி, முப்போக சாகுபடியை முழுமையாக முடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கடந்த ஆண்டு இதேநோளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.79 அடியாகவும், நீர்வரத்து 1170 கனஅடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: